கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார்.
மதுரை ஆதீனம், நடிகை ரஞ்சிதா உடன் வீடியோ, பாலியல் புகார்கள் எனப் பல சர்ச்சை, குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் இரு பெண்கள் காணாமல் போனது உள்பட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா கடந்த பல மாதங்களாக தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதத்தில், அவர் தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கி, அதைத் தனது தனி நாடாக அறிவித்து இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
அப்போது, “கைலாசா என்பது இந்துமதத்தைப் பின்பற்ற முடியாத நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களின் எல்லையற்ற நாடாகும். இது அமெரிக்காவில் உள்ள இந்து ஆதி சைவ மக்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் இனம், பாலினம், சாதி, மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத இந்துக்களுக்கான நாடாகும். இந்நாட்டில் ஆன்மீகம், கலாச்சாரம் அகிம்சை ஆகியவை பின்பற்றப் படும்” என அறிவிக்கப்பட்டது.
பின்னர், கைலாசா நாட்டின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது, அத்துடன் கைலாசா நாட்டில் உள்நாட்டுக் காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் ஆகிய துறைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது., விருப்பம் உள்ளவர்கள் அதில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அவர் அறிவித்தார்.
இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில்,
கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அர் தெரிவித்துள்ளார்.
தனக்கு நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால், நல்ல காரியங்களுங்காக செலவிட வங்கி தொடங்கி உள்ளேன்.
வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டு உள்ளது.
கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின்படியே தொடங்கப்பட்டு உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது.
300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளது.
கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்க தயாராகி விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.