கச்சத்தீவு  அத்துமீறல்: இலங்கை படைக்கு . வேல்முருகன் கண்டனம்

Must read

சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை புணரமைக்கும் பெயரில் இலங்கை  கடற்படை முகாம் அமைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியை நிரந்தரமாக அழிக்க சதி நடக்கிறது. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“தமிழகத் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவில் தற்போது உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இடித்துவிட்டு பிரமாண்ட கடற்படை முகாமை சிங்கள கடற்படை அமைத்துக் கொண்டிருப்பதை ஊடகங்கள் காட்சிப் பதிவுகளுடன் வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவில் இத்தகைய முகாமை இலங்கை கடற்படை அமைப்பது மிகவும் வன்மையான கண்டத்துக்குரியது.
 
download
தற்போதைய தேவாலயத்துக்கு பதில் புதிய தேவாலயம் கட்டப் போகிறோம் எனக் கூறிக் கொண்டு இதுபோன்ற நரித்தனத்தில் சிங்களக் கடற்படை இறங்கியுள்ளது. கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமான பகுதி. தமிழகத்தின் ஒப்புதலின்றி இந்திய மத்திய அரசால் சிங்களவருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இது தொடர்பான வழக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆகையால் இது சர்ச்சைக்குரிய பகுதி.
ஆனால் இதுபற்றி எதுவும் சிந்திக்காமல் சிங்கள கடற்படை தற்போதுள்ள தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயம் கட்டுகிறோம் எனக் கூறுகிறது. தேவாலயத்தை கட்டுகிறோம் என்ற பெயரில் கட்டுமான இயந்திரங்கள் சிங்கள கடற்படை படகுகளில் கொண்டுவரப்பட்டு கச்சத்தீவில் இறக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதர்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு பிரமாண்ட ஒரு கடற்படை முகாமை சீனா அரசுடன் இணைந்து அமைப்பதற்கான ஏற்பாடுகளை சிங்கள கடற்படை செய்து கொண்டிருக்கிறது. கச்சத்தீவு தமிழரின் பாரம்பரிய மீன்பிடி பகுதி என்ற போதும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும் சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி கடந்த மே மாதம் இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு இரவு விருந்து கொடுத்த மறுநாளே தனுஷ்கோடி அருகே பாம்பன் மீனவர்களை எல்லை தாண்டி வந்து சிங்கள கடற்படை தாக்கியது. கச்சத்தீவில் நிரந்தர முகாமை சிங்கள கடற்படை அமைத்துவிட்டால் தமிழக மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி பகுதியே நிரந்தரமாக இல்லாமல் போய்விடும்.
ஆகையால் இந்த தருணத்தையாவது இந்திய மத்திய அரசு சரியாகப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்பதற்காக போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” – இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 

More articles

Latest article