“கபாலி” பட வசூலின் ஒரு பகுதியை பொது நலனுக்கு செலவிட வேண்டும்!: நீதிபதி கருத்து

Must read

“கபாலி’ படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும்..” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’  திரைப்படம் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியானது.  படம் வெளியாவதற்கு முன்பு, சட்டவிரோதமாக ‘கபாலி’ படத்தை வலைதளங்களில் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாணு வழக்கு தொடர்ந்தார்.
1
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “கபாலி’ படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு, இந்தியாவில் உள்ள 169 இணையதள சேவை நிறுவனங்கள், இணையதளம் சேவைகளை வழங்க தடை விதித்து கடந்த ஜூலை 15-ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை மீறி, கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக சில இணையதளங்களில் வெளியானது.
இது குறித்து உயர்நீதிமன்றத்தில் ல், தாணுவின் வழக்குரைஞர் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தடை உத்தரவு பிறப்பித்தும் ‘கபாலி’ படம் எப்படி வெளியானது? படத்தை வெளியிட்ட வலைதளங்களுக்கு ஏன், சேவை வழங்கப்பட்டது..? இதை தடுக்க மத்திய அரசு எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லையா?” என்று  சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும், “இது குறித்து மத்திய அரசு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், மனுதாரர் ஆகியோர் தகவல் தொழில் நுட்பத் துறை நிபுணர்களின் கருத்துகளை கேட்டு, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.” என்று உத்தரவிட்டார்.
இதன் பின்னர் நீதிபதி,  “கபாலி’ படம் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது என்கின்றனர். இதனால், அந்த படத்தை தயாரித்த நிறுவனம் பெருநிறுவனமாக கருதப்படுகிறது. மத்திய அரசின் நிறுவனங்கள் சட்டத்தின்படி, பெருநிறுவனங்கள் சமுதாய பொறுப்புடன் செயல்படவேண்டும்.   ஆகவே,  இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் பொது நலனுக்காக செலவு செய்யவேண்டும். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றாலும், பிறப்பிக்க தயாராக உள்ளேன்..” என்று கருத்து தெரிவித்தார்.
பிறகு  இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

More articles

Latest article