கமல், ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பாக ட்விட் செய்து வரும் பிரபலங்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர்.
தன்னை குறித்து விமர்சித்த கஸ்தூரியை அழைத்து ரஜினி அரசியல் ஆலோசனை செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமலை கைது செய்யவேண்டும் என்றும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது கமலுக்கு ஆதரவாக ட்விட் செய்தார் கஸ்தூரி.
இந்த நிலையில் இன்று நியூஸ் 7 தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கஸ்தூரி கலநதுகொண்டார்.
அப்போது அவர், “ரஜினி, கமல் இருவரும் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்கள். இந்த இருவரின் அரசியல் வருகையை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி போன்றவர்கள் எதிர்ப்பதே இதை உறுதிப்படுத்துகிறது.
அரசியலில் ஈடுபடுவது, தேர்தலில் போட்டியிடுவது என்பது ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் இருக்கும் உரிமை. இந்த ஜனநாயக உரிமையை கி.வீரமணி எதிர்ப்பதை நான் கண்டிக்கிறேன்.
திக எப்போதுமே தேர்தலில் போட்டியிட்டதில்லை. அது மக்களை சந்திக்காத இயக்கம். இப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவர், அடுத்தவரை தேர்தலில் ஈடுபடக்கூடாது, அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.
ரஜினி, கமல் இருவரிடமும் கொள்கை இல்லை.. கொள்கை இல்லை என்று கி.வீரமணி சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவர் சொல்வது மட்டும்தான் கொள்கையா?
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார்.. கமல், ஊழலை எதிர்க்கிறார்.. இதுவே கொள்கைதான். டில்லியில் கெஜ்ரிவால், ஊழலை ஒழிப்பதே கொள்கை என அறிவித்து வெற்றி பெற வில்லையா” என்று கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.