புதுடெல்லி: வேக நடை போட்டியின் தேசிய சாதனையாளர் கே.டி.இர்ஃபான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தடகளப் பிரிவில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் முதல் இந்தியர் இவர்தான். ஜப்பான் நாட்டில் நடைபெற்ற தகுதிபெறும் போட்டியில் இவர் வெற்றிபெற்றார்.

20 கி.மீ. தூரத்தை 1 மணிநேரம் 21 நிமிடங்களில் கடக்க வேண்டிய நிலையில், இவர், 1 மணிநேரம் 20 நிமிடங்கள் 57 விநாடிகளில் கடந்து தகுதிபெற்றார்.

மேலும், கத்தார் நாட்டின் தோஹா நகரில், இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் தகுதி பெற்றுள்ளார் கே.டி.இர்ஃபான்.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய வேக நடை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்த கேரள மாநிலத்துக்காரர்.

சென்ற 2018ம் ஆண்டில் நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், இவரும், மற்றொரு இந்திய தடகள வீரரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி