சென்னை:

மிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.சண்முகம், இன்று 46வது தலைமை செயலாளராக தலைமைச்செயலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்துவந்த  கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து  தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வாழப்பாடியை சேர்ந்த முன்னாள் நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட்டார்.

தலைமை செயலகத்தில் இன்று தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக சண்முகம் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து  அவருக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று பதவி ஏற்றுக்கொண்ட புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சேலம் அருகே உள்ள வாழப்பாடியை சேர்ந்தவர். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்று உள்ளார். பின்னர் ஐ.ஏ.எஸ். ஆன அவர் 1985-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி தமிழக அரசு பணியில் சேர்ந்தார்.

பல்வேறு அரசு பணிகளை தொடர்ந்து,  புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் மாவட்ட கலெக்டராக ஆகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கருணாநிதி முதல் தற்போதைய எடப்பாடி வரை  4 முதல்வரிடத்திலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.