டில்லி

காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். அதற்கு மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் ராஜினாமா செய்தார்.

அவரை தொடர்ந்து மும்பையின் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இவ்வாறு தொடர்ந்து இரு தலைவர்கள் ராஜினாமா செய்தது காங்கிரஸ் கட்சியில் கடும் பரப்ரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜோதிராதித்ய சிந்தியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தியிடம் கடிதம் அளித்துள்ளேன். என்னை நம்பி அவர் பொறுப்பு அளித்தமைக்கும், எனக்கு கட்சியில் பணி புரிய வாய்ப்பு கொடுத்ததற்கும் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிந்துள்ளார்.