சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள பாமக ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது 10வது வேட்பாளரையும் அறிவித்து உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில், ஏப்ரல் 19-ம் தேதி அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இன்னும் முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.
பாஜக கூட்டணியில், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஓபிஎஸ் அணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே 9 தொகுதிகளில் பாமக வேட்பாளர் களை அறிவித்திருந்தது. காஞ்சிபுரம் தொகுதிக்கு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நேற்று (22ந்தேதி) மாலை காஞ்சிபுரம் வேட்பாளர் களையும் அறிவித்து உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக தருமபுரி தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்ற வேட்பாளர் மாற்றப்பட்டு சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.