ஸ்ரீபெரும்புதூர்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை தொடங்கி உள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் உயிர் நீத்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக ஆண்டு தோறும் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளையொட்டி இந்தியாவில் அமைதி வேண்டி ராஜீவ் ஜோதி யாத்திரை செல்வது வழக்கம்.
நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை ராஜீவ் ஜோதியை ஏற்றி யாத்திரை தலைவர் துரையிடம் ஒப்படைத்தார். ராஜீவ் ஜோதி கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியப் பிரதேசம், ஹரியானா வழியாக வருகிற 20-ந்தேதி டில்லியில் வீர் பூமியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படும்.
பிறகு டில்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராஜீவ் ஜோதியை வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் அவளூர் நாகராஜ், நகரக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அருள்ராஜ் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.