சென்னை:
முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர்  தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக கடையநல்லூரில் போட்டியிட்டு வென்றவர் அபூபக்கர். தற்போதும் தி..மு.க. கூட்டணியில் இருக்கிறஆர்.
இவர் இன்று திடுமென்று அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நலம் விசாரிக்கச் செல்வதாக சொல்லிச் சென்றார். ஜெயலலிதாவை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து திரும்பினார்.
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தவர், “முதல்வர் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். இதை விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சொன்னதாகவும் தெரிவித்தார்.
தனது தொகுதியான கடையநல்லூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கியதற்காக, “அம்மா”வுக்கு நன்றி என போஸ்டர் ஒட்டியவர் இவர்.  எதிர் முகாமை சேர்ந்த தலைவரை அடைமொழியோடு அழைக்கிறீர்களே என்று கேட்கப்பட்டதற்கு, “ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்கள் தலைவரின்  அடைமொழியை கொண்டுதானே அழைக்கிறார்கள். திமுகவினர் தங்கள் தலைவர் கருணாநிதியை கலைஞர் என்கிறார்கள்.   அண்ணாத்துரையை அண்ணா என்று அழைக்கிறோம்.  அதே மாதிரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பெரும்பாலானவர்கள் அம்மா  என்று  அடைமொழியில்தான் அழைக்கிறார்கள். . அதனால் அவரை அப்படி அழைப்பதில் தவறில்லையே” என்று சொன்னவர் அபூபக்கர்.
அபூபக்கர்
அபூபக்கர்

அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள்தான், ஜெயலலிதா முழு நலத்துடன் இருக்கிறார் என்று சொல்லிவந்தார்கள். பிறகு கூட்டணி கட்சி போன்ற பா.ஜ.க. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்து, “ஜெயலலிதா நலம்” என்றார். அடுத்ததாக கவர்னர் வந்து அதையே சொன்னார்.
இதற்கிடையே மாற்று முகாமில் – ம.ந.கூட்டணியில் – இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அப்போலோ மருத்துவமனை வந்து திரும்பி, “ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்” என்றார்.
அதே போல தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அபூபக்கர், அப்போலோ வந்து திரும்பி, அதையே சொல்லியிருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஜெயலலிதா உடல் நலம் குறித்து மர்மமாக இருக்கிறது. நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் புகைப்படத்தைக்கூடவா வெளியிடக்கூடாது” என்று அறிக்கைவிட்டுள்ள நிலையில் அவரது கூட்டணி கட்சி எம்.எல்.ஏ., ஜெயலலிதாவுக்கு நலச்சான்று வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.