டில்லி:

அயோத்தி நிலம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உ ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் நியமித்துள்ளார்.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் வரும் 11ம் தேதி மதியம் 2 மணிக்கு விசாரணையை தொடங்குகின்றனர். ‘‘ பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்குக்கு இறுதி தீர்ப்பை அளிக்க வேண்டும்’’ சுப்ரமணியன் சுவாமி கடந்த மாதம் 21ம் தேதி தலைமை நீதிபதி கேஹர் முன்பு கூறினார்.

அப்போது‘‘ இது தொடர்பாக பட்டியலிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மீது விரைந்து முடிவு எடுக்கப்படும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

‘‘மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான இந்த விவகாரத்திற்கு ஏன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண க்கூடாது’’ என்று அனைத்து தரப்பினரையும் கடந்த மார்ச் 21ம் தேதி தலைமை நீதிபதி கருத்து கேட்டிரு ந்தார்.

முன்னதாக இந்த வழக்கை கடந்த 2010ம் ஆண்டு விசாரித்த லக்னோ உயர்நீதிமன்ற அலகாபாத் கிளை சர்ச்சைக்குறிய 2.7 ஏக்கர் நிலத்தை ராம் ஜன்ம பூமி, நிர்மோகி அக்கரா, பாபர் மசூதி, சன்னி வக்பு வாரியம் ஆகியவை சமமாகி பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.

முஸ்லிம் அமைப்புகளின் மேல்முறையீட்டை தொடர்ந்து உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.