சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உயர்நீதிமன்ற விதிகளின்படி,  மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதுடன், நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில்,  3வது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின்போருது,  தமிழ்நாடு அரசு இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.  அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சவுக்கு சங்கர் வழக்கில் பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும், என்று நீதிபதி ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தார.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் ஏற்கெனவே இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்து 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஏன் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று (6ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் ஒரு நீதிபதி வழக்கின் தகுதி அடிப்படையில் தீர்ப்பளித்திருக்கிறார். மற்றொருவர் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பின்னர் தான் வழக்கில் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தற்போது, தமிழக அரசு பதில் மனுவில் தாக்கல் செய்துள்ளதால், ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை முழுமையானதாக கருத முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச் முன் விசாரிப்பது பொருத்தமானது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கை உரிய பெஞ்ச் முன் முன்னுரிமை அடிப்படையில் வாதிடத் தயாரா என்று வழக்கறிஞர்களிடம் கேட்டது, அதற்கு வழக்கறிஞர்கள் சாதகமாக பதிலளித்தனர். இதையே குறிப்பிட்ட நீதிமன்றம், ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் பெஞ்ச் முன் வைக்குமாறு உத்தரவிட்டது.

தடுப்புக்காவல் உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வாறு வெடித்துள்ளன என்பதைப் பார்த்த நீதிமன்றம், தடுப்புக்காவல் உத்தரவுகளுக்கு எதிரான ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒரு பொறிமுறையை உருவாக்கவும் பரிந்துரைத்தது.

சென்னை உயர் நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமானால் அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக செல்வாக்கு மிக்க இரண்டு பேர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், நியாயமாக இந்த வழக்கை விசாரிக்காமல், விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன்,  தொடர்ந்து, ஆட்கொணர்வு மனுக்கள் 2 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஜூன் 12 ம் தேதி மீண்டும் பட்டியலிட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. வழக்கமான நடைமுறைப்படி, சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வகையில், மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வழக்கை பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர். அதன்படி, வழக்கின் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த  நிலையில், சவுக்கு சங்கர் தாயார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.