சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து கிடக்கும் நிலையில், 445 இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பழைய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம் 75 நீதிபதிகளைக் கொண்டது. தற்போது 45 நிரந்தர நீதிபதிகளும் 14 தற்காலிக நீதிபதிகளும் என மொத்தம் 60 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இன்னும் 15 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் வழக்குகள் விசாரணை செய்வதில் கால தாமதம் ஆகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி, ஏற்கனவே வழக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, இரண்டாவது முறையாக மேல்முறையீடுகள் செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டட சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க முடிவு செய்து உள்ளார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010 முதல் நிலுவையில் உள்ள அனைத்து 445 இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள சிவில் வழக்குகளை அடுத்த 58 வேலை நாட்களில் தீர்த்து வைக்கப்போவதாக அறிவித்து உள்ளார். தனது முயற்சிக்கு வழக்கறிஞர்களும், பார் கவுன்சில் உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.