டில்லி:

உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று முடிந்த ஓபிஎஸ் -ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு இன்று விசா ரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், இன்றைய உச்சநீதி மன்ற விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதி விசாரணையை  தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்திருந்த நிலையில், வழக்கின் விசாரணை உச்சநீதி மன்றத்தில் பட்டியலிடப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி இன்னும் இரு வாரங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், வழக்கின் இறுதி விசாரணை தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது.

நீதிபதி சிக்ரி ஓய்வுபெற்ற பிறகு, அந்த இடத்திற்கு புதிய நீதிபதி நியமிப்பட்டால், வழக்கு மீண்டும் முதலில் இருந்தே விசாரணை நடைபெற வேண்டிய சூழல் ஏற்படும். இதன் காரணமாக வழக்கின் தீர்ப்பு  மேலும் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து  அதிமுக 2 ஆக உடைந்தது.  எடப்பாடி தலைமையிலான  அரசு சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்தது. இதன் காரணமாக எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட ஆவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் தீர்ப்பில் தலையிட நீதி மன்றம் மறுத்து விட்டது. அதையடுத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அங்கு பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இறுதிநாள் விசாரணை நடைபெற்றதும் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து.

ஆனால், இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், விசாரணை பட்டியலில் பதிவிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதம் வழக்கில் இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 4-2-19 மற்றும் 11ந்தேதியும் விசாரணை பட்டியலில் இடம்பெற்ற இந்த வழக்கு பின்னர் நீக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் வழக்கு இடம் பெறவில்லை.

இது வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து பட்டியலிடப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு, பாஜக அதிமுக கூட்டணிதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.