சென்னை

டிகர் விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கித் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியைப் பதிவு செய்துள்ள நடிகர் விஜய் வரும் 2026  சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்தார்.

மேலும் இந்த மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட போவதாகவும் அவர் கூறினார்.

விஜய் அரசியல் பணிகளை இப்போதே முழுவீச்சில் விஜய் தொடங்கி. சமீபத்தில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் விஜய் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்துப் பொறுப்புகள் வழங்கத் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியானது. இன்னும் 10 நாட்களில் புதிய மாவட்டம் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.

தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டை விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களைக் கவரும் வகையில் கட்சிக் கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளன எனக் கூறப்படுகிறது.