டில்லி
பாபா ராம்தேவ் பற்றி எழுதப்பட்டுள்ள GODMAN TO TYCOON : THE UNTOLD STORY என்னும் ஆங்கிலப்புத்தகத்தை பிரசுரிக்கவோ வெளியிடவோ கூடாது என நீதிமன்றம் புத்தக வெளியீட்டாளருக்கு தடை விதித்துள்ளது
ஜுகர்னாத் புக்ஸ் என்னும் புத்தக நிறுவனம் பாபா ராம்தேவ் பற்றிய ஆங்கிலப் புத்தகாமான GODMAN TO TYCOON : THE UNTOLD STORY (தமிழில், சாமியாரிலிருந்து ஜாம்பவான் வரை : சொல்லப்படாத கதை) வெளியிட இருந்தது. இதை எதிர்த்து பாபா ராம்தேவ் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த புத்தகத்தை பிரசுரிக்கவோ, வெளியிடவோ கூடாது என டில்லி மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது குறித்து ஜுகர்னாத் புக்ஸ் வெளியிட்டுள்ள தகவலானது :
”இந்த புத்தகம் தடை செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 4ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி கிடைக்கப் பெற்றது. அதன் படி நாங்கள் உடனடியாக அந்த புத்தகம் பிரசுரிப்பதை நிறுத்தி விட்டோம்.
இந்த தீர்ப்பு பிரசுரிப்பாளர் ஆகிய எங்களையோ, அல்லது புத்தக ஆசிரியர் பிரியங்கா பதக் நாராய்ணையோ கலந்தாலோசிக்காமல் ஒருதலையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காலதாமதத்தை தவிர்க்கவே இவ்வாறு செய்ததாக காரணம் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் தனது ஆட்சேபத்தை தெரிவிக்க நீதிமன்றத்தை அணுகும் உரிமை உள்ளது. இந்த வழக்கில் எங்கள் வாதத்தையும் கேட்டு, முழு விவரத்தையும், தெரிந்துக் கொண்டு தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். எங்களது இந்தப் புத்தகம் மொத்தம் 50 பேட்டிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. அனைத்து பேட்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளை எங்களுக்கு அளித்தவர்கள், பாபா ராம்தேவின் வாழ்க்கையில் தொடர்புடையவர்கள், மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களே. அவ்வளவு ஏன், பாபா ராம்தேவ் அளித்த பேட்டியையும் ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் 25 பக்கங்களுக்கு இந்த புத்தகத்தின் ஆதாரம் மற்றும் அந்த ஆதாரங்களின் விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரசுரிக்கப்படும் முன் இதன் கையெழுத்துப் பிரதி சட்ட வல்லுனரிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டது. புத்தக ஆசிரியரிடம் உள்ள பேட்டிகள், மற்றும் அவைகளின் பதிவுகளும் தடவியல் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு உண்மையானவை என ஊர்ஜிதம் செய்யப்பட்டவை. இந்த ஒருதலைத் தீர்ப்பு எங்களை மட்டும் அல்ல, புத்தக ஆசிரியர் பிரியங்கா, வெளியிட்டாளர் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களையும் நஷ்டத்துக்கு உண்டாக்குகிறது.
இது சட்டபூர்வமான தீர்ப்பு என்பதால் மேற்கொண்டு இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் விரைவில் எங்களிடமுள்ள ஆதாரங்களைக் கொண்டு இந்த தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்”
இவ்வாறு தெரிவித்துள்ளது.