நீதிபதி பறந்த தனி விமானத்துக்கு மணிக்கு ரூ. இரண்டரை லட்சம் கட்டணம்..
ஊரடங்கால் பக்கத்துத் தெருவுக்குக் கூடப் போக முடியாமல், வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறோம்,
பணி செய்ய வேண்டிய அதிகாரிகள், கிடைக்கும் வாகனத்தைப் பிடித்து ,கொடுக்கும் பொறுப்பைச் செய்து வருகிறார்கள்.
அவர்களில் மூவர் குறித்த செய்தி இது: மூன்று பேருமே நீதிபதிகள்தான்..ஆனால் அவர்களின் போக்கு மட்டும் ஒன்றுக்கொன்று எவ்வளவு முரண்பாடுகள்?
சத்தீஷ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர், ராமச்சந்திர மேனன்.
கொச்சியில் தங்கி இருந்த அவர், சத்தீஷ்கருக்கு அவசர பணிக்காக உடனடியாக செல்ல வேண்டிய சூழல்.
விமானங்கள் இல்லை.
என்ன செய்வது?
சத்தீஷ்கர் மாநில அரசு,8 பேர் அமரக்கூடிய விமானத்தை நீதிபதி ராமச்சந்திரனுக்காக ‘ஸ்பெஷலாக’’ ஏற்பாடு செய்தது.
அந்த சிறப்பு விமானத்தில் ஏறி அமர்ந்து நீதிபதி ராமச்சந்திரன், சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு, பல மணி நேரம் பயணித்து, உயர்நீதிமன்ற வளாகத்தை ஒரு வழியாய் சென்றடைந்தார்.
கொச்சியில் இருந்து பிலாஸ்பூருக்கு பயண தூரம் 2 ஆயிரம் கி.மீ.
அவர் பயணித்த விமானத்துக்கு ஒரு மணி நேர வாடகை, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.
மற்ற இரு நீதிபதிகள் குறித்த செய்தி இப்போது:
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த திபாங்கர் தத்தா, பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு, அவர் காரில் 2 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து, மும்பை போய்ச் சேர்ந்து, பின்னர் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதுபோல், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஸ்வநாத் சோமாத்தர், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அவரும், காரிலேயே அலகாபாத்தில் இருந்து புறப்பட்டு, மேகாலயாவுக்கு போய்ச் சேர்ந்தார்.
அவர் பயணம் செய்த தூரமும், 2 ஆயிரம் கி.மீ.தான். ஒரே பதவி.. ஆனால் விதவிதமான அணுகுமுறைகள்.
– ஏழுமலை வெங்கடேசன்