சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

நாட்டின் எல்லா துறையிலும், தவறு செய்தால் அவரை உடனே தண்டிக்க வழிமுறைகள் உண்டு.. ஆனால் நீதிபதிகள் தவறு செய்தால், அது அப்பட்டமான தவறே என்று வெளிப்படையாகவே தெரிந்தாலும் அவர்கள் மேல் கை வைப்பது அவ்வளவு சுலபமல்ல..

நீதி பரிபாலனத்தை செய்யும் அவர்களுக்கு, பழிவாங்கல் மனப்பான்மையோடு ஆட்சியாளர்களால் சுபலத்தில் தீங்கு நேரிடாதபடி கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கேடயம், எந்த அளவில் நாட்டுக்கு பலனளிக்கிறது என்பதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்காண்டு சிறை தண்டனையை எதிர்த்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது..

இதில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு சொன்ன நீதிபதி குமாரசாமி, எந்த வருமான கணக்குகளை கூட்டிப்பார்த்து விடுதலை தந்தாரோ, அந்த கூட்டல் கணக்கே முற்றிலுமாக தவறு என்பது தெரியவந்தது.. இதனால் ஜெயலலிதாவுக்கு விடுதலை என்ற அந்த தீர்ப்பின் அர்த்தமே கேள்விக்குறியாகிப்போனது..

நீதிபதி ஒருவர்,அவர் அளித்த தீர்ப்பை அவரே நினைத்தாலும் மாற்றமுடியாது. அவருக்கு மேலான நீதிமன்றத்திடம் மேல் முறையிட்டுக்கு போகும்போதுதான் மாற்றமுடியும்… இதுவே எவ்வளவு அபத்தமானது.. இதைவிட அபத்தம், தப்புத்தப்பாய் கூட்டி கோளாறு விடையின் அடிப்படையில் தீர்ப்பு எழுதிய நீதிபதி குமாரசாமி..

ஓய்வு பெற்றுவிட்டாலும் அந்த மாபெரும் தவறுக்காக என்ன தண்டனை பெற்றார் என்பது சம்மந்தபட்டவர்க ளுக்கே வெளிச்சம்.. இந்திய நீதித்துறை தனது அருமையான செயல்பாட்டுக்களுக்காக எப்போது வேண்டு மானாலும் இந்த விஷயத்தில் பெருமை பட்டுக்கொள்ளலாம்

லேட்டஸ்ட் விவகாரத்தை பார்ப்போம்.. மருத்துவ மாணவர்  சேர்க்கை ஊழல் விவகாரத்தில் உத்திரப்பிரதேசம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லாவிக்கு தொடர்பிருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன…

இதே மாதிரியான மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஒடீஷா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஐ.எம்.குத்தேஷியும் கோல்மால் செய்தார் என பேச்சு அடிபட்டது..விசாரணையில் குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம் கிடைத்ததும் ரிட்டர்மெண்ட் ஆகியிருந்த அவரை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, கடந்த ஆண்டு செப்டம்பர் 20ந்தேதி கைதுசெய்தது.

அப்போதே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விவகாரதில் தனியார் கல்லூரிகளோடு நீதித்துறை மகான்கள் சிலரும் கைகோர்த்து களவாணித்தனம் செய்துள்ளனர் என்ற பதைபதைப்பான தகவல்கள் கசிய ஆரம்பித்தன.. அவற்றில் இன்னொரு முக்கியமான விவகாரம்தான், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லாவுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகார்.

வழக்கம்போல ஆரம்பத்தில், ‘’என்னது, பணியில் இருக்கும் நீதிபதி மீதே புகாரா? இதையெல்லாம் அனுமதித்தால் நீதித்துறையின் மாண்பே குலைந்துபோய்விடும்.. நீதிபதிகள் அனைவர் மீதும் ஆளாளுக்கு புகாரோடு அலைய ஆரம்பித்துவிடுவார்களே என பதறிப்போனது நீதித்துறை தலைமை..

கடைசியில் இனியும் தள்ளிப்போடவோ, தவிர்க்கவோ முடியாத ஒரு நிலை வந்தபோது கடந்த டிசம்பர் எட்டாந்தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒன்றை அமைத்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான குழுவில், சிக்கிம் தலைமை நீதிபதி எஸ்.கே. அக்னிஹோத்ரி மற்றும் மத்தியபிரதேச தலைமை நீதிபதி பிகே.ஜெய்ஷ்வால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழு விசாரித்தில் நீதிபதி சுக்லா மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. ‘’உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை தன் இஷ்டத்திற்கு வளைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கு சாதகமாக நீதிபதி சுக்லா செயல்பட்டு நீதித்துறைக்கு களங்கம் கற்பித்துவிட்டார், அவரை பணி தொடரச்செய்வது நீதிமன்றங்களின் மாண்பை குலைத்துவிடும்’’ என்று மூவர் நீதிபதிகள் குழு அறிக்கை தந்துள்ளது..

அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், உடனே அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லா பதவி விலகவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.. முடியாவிட்டால் கட்டாய ஓய்விலாவது போகச்சொல்கிறது.. ஆனால் நீதிபதி சுக்லா முடியாது என்று நேற்று மறுத்துவிட்டார்..

நீதிபதி சுக்லாவை உச்சநீதிமன்றத்தால் ஒன்றும் செய்துவிடமுடியாது. இருந்தாலும் இரண்டு அதிகாரங்களை அதனால் பயன்படுத்தமுடியும். அதில் முதலாவது, குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிக்கு வழக்குகளை விசாரிப்பது உள்பட எந்த பணியையும் வழங்கவேண்டாம் என்று சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு உத்தரவிடுவது.. முதலாவது அதிகாரம் தற்போது பயன்படுத்தப்பட்டுவிட்டது.

அடுத்து. நீதிபதி சுக்லாமீது பதவி நீக்கக்கோரும் இம்பீச்மெண்ட் எனப்படும் கண்டன தீர்மான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதுவது.. இனிமேல் படிக்கும் உங்களுக்கு, நிச்சயம் தலை சுற்றும்..

ஒரு நீதிபதியை அவ்வளவு சுலபத்தில் தண்டித்துவிடமுடியாதபடி எந்த உயரத்தில் நமது அரசியல் சாகன சட்டத்தில் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியவரும்..

உச்சநீதிமன்ற தலைமை ஆட்சியாளர்களுக்கு இம்பீச்மெண்ட் பற்றி கடிதம் எழுதியதும் ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமாக உள்ளவர் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து மூவர் உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட மூவர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்..இந்தக்குழு, ஏற்கனவே மூன்று நீதிபதிகள் கொடுத்த விசாரணை அறிக்கைக்கு ஆராயும்..அதாவது பதவி நீக்கக்கோரும் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு ஆதாரங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதா என்று லென்ஸ்மாட்டிக்கொண்டு பிரித்து மேயும்..

ராஜ்யசபா தலைவரால் அமைக்கப்பட்ட குழு, ஆமாம் மேற்கொண்டுபோவற்கு அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளது என்று பச்சைக்கொடி காட்டவேண்டும். அப்படிகாட்டிய பிறகுதான். தவறிழைத்த நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முஸ்தீபுகள் தொடங்கும்.. அதாவது அடுத்து கிறுகிறு ஆரம்பமாகும்..

நேரடியாக இம்பீச்மெண்ட் தீர்மானத்தை முன்மொழிய, ராஜ்யசபா என்றால் 50 உறுப்பினர்கள், மக்களவை என்றால் 100 உறுப்பினர்கள் வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு சபையிலும், வருகை தந்திருக்கும் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும்..

இப்படி நாடாளுமன்ற இரு அவைகளும் நீதிபதிக்கு எதிராக வெற்றிகரமாய், அதிகாரபூர்வமாய்  பொங்கிய பிறகே இரு தீர்மானங்களில் அடிப்படையில், மேற்படி நீதிபதியை பதவி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார்..

நமது கூட்டல் குமாரசாமி வகையறாக்கள் என்றாலும் அவர் மீது கை வைக்கவும் இதே விதிகள்தான். அப்போது கூட கறைபடிந்த நீதிபதிமீது, வெறுமனே, தவறான நடத்தை அல்லது நீதிபரிபாலன திறமையின்மை என்ற இரண்டே காரங்களில் ஏதாவது ஒன்றைத்தான் சொல்லி சீட்டை கிழிப்பார்கள்.

இப்படி இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முதலில் சீட்டுக்கிப்பு அபாயத்தை எதிர்நோக்கியவர் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி வி.ராமசாமிதான்.

பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்துவிட்டு 1989ல் உச்சநீதிமன்றத்திற்கு பிரமோட் ஆனவர். பஞ்சாப்பில் இருந்தபோது ஆடம்பர வசதிகளுக்காக அரசு பணத்தை லட்சக்கணக்கில் வீணடித்தார் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாகி நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் ஏற்பாடானது.

14 குற்றச்சாட்டுகளில் பதினொன்றிற்கு ஆதாரங்கள் உண்டு என நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிமான்கள் குழுவே உறுதிப்படுத்தியது. ஆனாலும் லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசாமிக்கு எதிரான தீர்மானம் தோற்றுபோனது..ஹாயாக பின்னாளில் ராமசாமியும் ஓய்வுபெற்றார்.

இந்த புண்ணியவான் வி.ராமசாமியைத்தான் சிவகாசி மக்களவை தொகுதியில் வைகோவுக்கு எதிராக அதிமுக வேட்பாளராக நிறுத்தி அழகுபார்த்தார் ஜெயலலிதா.

2011ல் சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு எதிராக ஊழல் புகாரில் இம்பீச்மெண்ட்.. விசாரணை கமிட்டி அமைத்து விவகாரம் சூடுபிடித்த உடனே நீதிபதி பி.டி.தினகரன் ராஜினாமா செய்தார்.

அதே 2011ல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென், நீதிமன்ற பணத்தில் 33 லட்ச ரூபாயை ஸ்வாகா செய்தார் என இம்பீச்மெண்ட் கொண்டுவரப்பட்டு ராஜ்யசபாவிலும் வெற்றிகரமாக தீர்மானம் நிறைவேறியது. அடுத்த மக்களவையில் தீர்மானம் வருவதற்குள் அவமானத்துக்கு பயந்து அவராகவே ராஜினாமா…

2015 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பர்த்திவாலாவுக்கு எதிராக ராஜ்யசபா எம்பிக்கள் 58 பேர் கையெழுத்திட்டு மனு கொடுத்ததும், ராஜ்யசபாவிலிருந்து இம்பீச்மெண்ட் நோட்டீஸ் நீதிபதிக்கு பறந்தது. அவர் மீதான புகார் என்ன தெரியுமா?

‘’ சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் இந்த நாடு முன்னேறாமல் சீரழிந்துபோவதற்கு என்னைக் கேட்டால் இரண்டே இரண்டு காரணங்களைத்தான் சொல்வேன். ஒன்று இட ஒதுக்கீடு. இன்னொன்று ஊழல்.’’ இப்படியொரு பத்தியை தனது தீர்ப்பு ஒன்றில் நீதிபதி பர்திவாலா சொன்னதுதான் எம்பிக்களின் கோபத்திற்கு காரணம். கடைசியில் சம்மந்தப்பட்ட கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்குவதாக நீதிபதி பர்திவாலா சொன்ன பிறகே பிரச்சினை அடங்கியது.

கடந்த ஆண்டு இருமுறை ஆந்திரா மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. நாகார்ஜுன ரெட்டி மீது, ஊழல், நிர்வாகத்தில் குறுக்கீடு, சாதிவெறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ராஜ்யசபாவில் இரண்டு முறை இம்பீச்மெண்ட் முயற்சி நடந்தது. ஆனால் தீர்மானத்தை கொண்டுவர கையெழுத்திட்ட உறுப்பினர்கள் பலர் திடீரென பின் வாங்கியதால் நீதிபதி நாகார்ஜுனா ரெட்டி தலை தப்பியது.

இங்கே ஒரு விஷயத்தை கூர்ந்துகவனித்தால் அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று அமைதியாக படுத்துறங்கும்..

அதாவது தவறிழைக்கும் நீதிபதிகளுக்கு நம்நாட்டு நாடாளுமன்றம் தரும் ஒரே தண்டனை, பதவி நீக்கம்.. எல்லாம் சரி. அப்போது அவர்கள் செய்த கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனை?

சட்டத்தின் முன் அனைவரும் சொல்கிறார்களே, அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? ஏதாவது இருக்கும்.. நமக்குத்தான் புரியவில்லை..