சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

திரும்பிய திக்கெல்லாம் கோளாறுகள் மயம் என்றால், அது சாட்சாத் நம்ம தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள்தான்.

நாம் சொல்லப்போகும் தகவல்களையும் விஷயங்களையும் வாய்ப்பு கிடைத்தால் அரசு பேருந்து தொழிலாளர்களிடம் பேசி சரிபார்த்துக்கொள்ளுங்கள்..

அரசின் எல்லாத்துறைகளிலும் பதவி உயர்வு என்பது கௌரவமான அளவில் கிடைக்கும். வருவாய் துறையில் ஒரு விஏஓவாக சேர்க்கிறவர், ஆர்ஐ, டெபுடி தாசில், தாசில்தார், பின்னர் சப்-கலெக்டராகவும் ஆகி ரிட்டயர் வாய்ப்பு உண்டு.

போலீஸ் கான்ஸ்டபிள்கூட கிரேட் டூ, ஏட்டு, ஸ்பெஷல் எஸ்.ஐ, ரெகுலர் எஸ்ஐ என ரிட்டயர் ஆவார்.. ஆனால் போக்குவரத்து துறையில் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பெரிய சாபக்கேடே உண்டு. நூற்றுக்கு எண்பதுபேருக்கு கடைசிவரை அதே ஸ்டியரிங்தான், தோல் பைதான்..

சிலபேருக்கு மட்டுமே ரிட்டயர் ஆக சொற்ப காலமே இருக்கிறது என்ற நிலையில், போனால் போகிறது என்று ஓட்டுநருக்கு, டிரைவிங் இன்ஸ்ட்ரக்ட்டர் எனவும், நடத்துனருக்கு செக்கிங் இன்ஸ்பெக்டர் எனவும் ஒரேயொரு பிரமோஷன் தருவார்கள். ஆனால் ஒரு குட்டி அதிகாரியாக அதே போக்குவரத்து கழகத்தில் நுழைந்தால், ஒட்டுமொத்த கழகத்திற்கே எம்.டி.யாக உயரத்தில் போய் உட்கார முடியும்.

பொதுவாக ஓட்டுநர்கள் தொடர்ந்து பணிசெய்தால் உடல் சோர்வாகி விபத்துக்கு வழிவகுக்கும் என்பது உலகம் முழுவதும் தெரிந்து விஷயம். ஆனால் இது தெரியாத வர்க்கம், போ.க. அதிகாரிகள் வர்க்கம்தான்.

பதினாறு மணிநேரம், பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து பேருந்தை ஓட்டுபவர், கடைசி நடை முடிந்து எப்போது வீட்டுக்கு போய் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும்போதுதான், இன்னொரு 200, 300 கிலோ மீட்டர் தூரம் ஸ்பெஷல் ஓட்டிவிட்டு வா என்று அதிகாரிகள் விரட்டுவார்கள்.. போகாவிட்டால், சார்ஜ் மெமோ எந்த வடிவத்தில் வரும் என்றே சொல்லமுடியாது.

நியாயமாக பார்த்தால், ஓட்டுநர்களே கூடுதல் பேட்டாவுக்கு ஆசைப்பட்டு அதிக பணிநேரம் கேட்டால்  பயணிகளின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்றிவிடவே கூடாது. ஆனால் இங்கே எல்லாமே நேர்மாறாகத்தான்.

ஒவ்வொரு ஊரிலும், இப்போதெல்லாம் எவ்வளவு போக்கு வரத்து நெரிசல்கள்.. இருபது ஆண்டுகளுக்கு முன்பு டூ விலரில் போய் வந்த அதே நேரத்தில் இன்றும் சென்று வரமுடிகிறதா?

இதன்படி பார்த்தால், ஆண்டுக்கு ஆண்டுக்கு பெருகும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு அதற்கேற்ப ஓட்டுநர்களுக்கு கிலோ மீட்டரை படிப்படியாக குறைக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகங்களிலோ, முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஓட்டிய தூரத்தைவிட இன்று ஒன்றரை மடங்கு அதிகமாகத்தான் ஓட்டுவார்..

சாதாரண விஷயங்களிலேயே இப்படி என்றால், மற்ற விஷயங்களை பற்றி கேட்கவா வேண்டும்.

நாம் முந்தைய முதல் பகுதி கட்டுரையில் குறிப்பிட்டது மாதிரி, கிளை மேலாளருக்கும் எம்டிக்கும் இடையே உள்ள அதிகாரிகளில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் தேவையே இல்லாதவர்கள். தனி வாகனம், தனி ஓட்டுநர், டீசல் என அனாவசிய செலவை அதிக அளவில் வைப்பவர்கள் இவர்கள்தான்.

பராமரிப்பு விஷயத்தில் முழு அக்கறை காட்டினால் தேய்மான செலவு பெருமளவு குறையும்.. இங்கு தேவையான முக்கிய விஷயம், தரமான பொருட்களை வாங்குவது என்பது..ஆனால் அதெல்லாம் கனவிலும் நடக்காது.

ஒரு டிஜிட்டல் ரூட் டிஸ்பிளே போர்டு விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். குத்துமதிப்பாக தனியார் ஒரு ரூபாய் செலவழித்தால் இவர்கள் மூன்று ரூபாய் கணக்கு காட்டுவார்கள். டயர், கண்ணாடி, ஆயில் போன்ற பொருட்கள் பற்றியெல்லாம் விவரித்தால் அதுபோய்க்கொண்டே இருக்கும்.

‘’மட்டமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்கி சுருட்டு, அடிக்கடி ரிப்பேர் வந்து அடிக்கடி பொருளை மாற்றி மேலும் மேலும் ஓயாமல் சுருட்டு..’’ இந்த தாரக மந்திரம்தான் போக்குவரத்து கழகங்களின் பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணம்..

ஒரு பக்கம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, விதவிதமான தியாகிகளுக்கு, பத்திரிகையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை, அரசு கொடுத்துக்கொண்டே இருக்கும்.. ஆனால் அதற்கான தொகையை போக்குவரத்து கழங்களுக்கு காலா காலத்தில் அரசு தரவே தராது. கண்டிப்பாக தருவோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.

அப்புறம் தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில் பணிக்கு போகாமல் ஹாயாக வலம் வரும் கும்பல். மதுரை மண்டலத்தில் மட்டும் 180 ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அவர்களை வேலையை செய்யாமல் வேறு இடங்களில் சாந்தமாக இருப்பதன் காரணமாக தினமும் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம்வரை நடை இழப்புஎன்றும் ஆண்டுக்கு இவர்களால் மட்டும் ஒன்பது கோடி ரூபாய் என்று வெளியான தகவலை ஏற்கனவே சொன்னோம். எட்டு மண்டலங்களின் நிலைமையை கூட்டிப்பார்த்தால் எவ்வளவு நஷ்டம் வரும் என்று யோசித்தால் தலையே சுற்றும்.

அப்புறம் டீசல் விவகாரம், மக்கள் அதிக அளவில் முன்வந்து பயன்படுத்தும் அளவுக்கு பொதுப்போக்குவரத்தை செம்மை படுத்துவதே ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம். அதற்கு கட்டணத்தை நியாயமாக வைத்திருந்தாலே போதும்.

தமிழக அரசு பேருந்துகள், ஒரு நாளைக்கு சுமார் 95 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. ஒரு லிட்டருக்கு ஐந்து கிலோ மீட்டர் என்றாலும் 19 லட்சம் லிட்டர் டீசல் தேவை..

ஒரு லிட்டர் டீசலுக்கு தமிழக அரசு பத்து முதல் பதினைந்து ரூபாய்வரை வாட் வரியாக சம்பாதிக்கிறது.. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மட்டும் இந்த வரி இல்லாமல் டீசல் வழங்கினாலேபோதும்.. ஒரு நாளைக்கு இரண்டுகோடி ரூபாய் மிச்சமாகும். கேட்டால் கழுத்தை சுற்றி மூக்கை தொடுகிறமாதிரி மான்யம் கொடுக்கறோம் என்பார்கள்.

அரசு போக்குவரத்து கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு தினசரி 12 கோடி ரூபாய் என்றிருந்த நிலையில், அண்மையில் கட்டணங்களை உயர்த்திய பிறகு தினசரி இழப்பு வெறும் நான்கு கோடியாக குறைந்துவிட்டுள்ளது.. டீசலை வரியில்லாமல்  மான்யவிலையில் கொடுத்தால் இந்த நான்கு கோடி இழப்பு வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு வந்துவிடும்..

மேலே சொன்ன, தேவையற்ற அதிகாரிகள், வேலைபார்க்காத தொழிற்சங்கத்தினர், பராமரிப்பு பணிகளில் முறைகேடு, ஊழல் செய்ய தரமற்ற மட்டமான உபfரணங்கள் கொள்முதல் போன்றவற்றை ஒரு தட்டு தட்டினாலே போதும், செலவுகள் குறைந்து நஷ்டமும் குறையும்..

அப்புறம் விளம்பர வருவாய் விஷயங்களோடு, போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான காலியிடங்களை தொழிலாளர்க ளுக்கென உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வாடகை அடிப்படையில் வர்த்தக பயன்பாட்டிற்கு கொடுத்தால் கூடுதல் வருமானம் பெருகும்.

அண்மையில்கூட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகள் நடத்துவது தொடர்பாக ஒரு திட்டம் உருப்பெற்று உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

321 பணிமனைக்கொண்டுள்ள செயல்படும் போக்குவரத்து கழகங்களில் பணிமனைவாரியாக துல்லியமாக வரவு செலவுகளை கணக்கெடுத்து சீர்படுத்துவது உட்பட பல ஆய்வுகளை செய்தால் கோளாறுகள் துல்லியமாக தெரியவரும்..

அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக பார்த்தால் என்றைக்குமே ஓட்டைகளை அடைக்கவே முடியாது.

மக்கள் சேவையே முதல் இலக்கு என்ற உயரிய நோக்கத்தோடு நடத்தப்படும் அரசு போக்குவரத்து கழகங்கள், அதிக லாபம் ஈட்டவேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் நஷ்டம் இல்லாமல் இயங்க வகை செய்தாலே போதும்..