சென்னை

ஜீவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

க்ரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, தயாரித்துள்ளது..  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மாரியப்பன் தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு எஸ்.எஸ்.ஐ. என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,

விசாரணையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்குக் காப்புரிமை ஏதும் வழங்கவில்லை எனவும், படத்தை வெளியிடத் தகுதியான வினியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ளது.  இந்நிலையில், ஜெயில் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை டிசம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.