சென்னை:
சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு உள்ளது.
சென்னை மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வந்த நிலையில், மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசு, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வரும் பணி கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி தொடங்கியது. ஒரு தடவைக்கு 50 வேகன்கள் மூலம் சுமார் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களில் 100 முறை தண்ணீர் எடுத்து வந்துள்ள இந்த ரயில், சென்னைக்கு 520 மில்லியன் லிட்டர் தண்ணீரை தந்துள்ளதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரெயில் மூலம் வரும், தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப் பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப் பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் தண்ணீர் பிரச்சினை ஓய்ந்துள்ளதாகவும், மழையின் புன்னியத்தால், பல பகுதிகளில் போர்வெல்கள் ரீசார்ஜ் செய்யப்பட்டு உள்ளதால், மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல சென்னை மக்களின் நீரின் தேவை அதிகமாக இல்லை என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.