சென்னை:

ஜோலார்பேட்டையில் இருந்து மலர் அலங்காரத்தோடு புறப்பட்ட சென்னை  குடிநீர் ரயில் இன்று மதியம் சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது. அதை அதிகாரிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

ஜோலார் பேட்டையில் புறப்பட்ட தண்ணீர் ரயில்

சென்னையில் நிலவி வரும் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி,  ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வரும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரெயில் மூலம் ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.  தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது.

வில்லிவாக்கம் வந்தடைந்த தண்ணீர் ரயில்

சென்னை மக்களின் தாகம் தீர்க்க வந்த முதல் குடிநீர் ரெயில் என்பதால், அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ரெயில் மூலம் வந்துள்ள தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப் பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.