சென்னை:

ரும் 2021ம் ஆண்டுக்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் அனைத்தும், புதைவட மின்கம்பி களாக மாற்றப்படும் இதற்காக  சென்னைக்கு மட்டும் ரூ.2567 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் தங்கமணி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தின் இன்று மின்வாரிய துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மழைக்காலத்தில் மின்கசிவால் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது; கொளத்தூரில் புதைவட மின்கம்பிகளாக மாற்ற நடந்துவரும் பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,  சென்னையில் 6,532 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டிற்குள் இத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், பருவமழை தொடங்க உள்ள நிலையில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க ஓராண்டுக்குள்ளாக பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, இந்த விவகாரம் தொடர்பாக  டெண்டர் விடுவதில் கால தாமதம் ஆகிவிட்டதாலும், இரவு நேரங்களில் மட்டுமே பணி செய்ய முடிவதா லும் கால தாமதம் ஏற்படுவதாகவும்,  கொளத்தூர் தொகுதியில் ஓராண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும், மற்ற பகுதிகளில் 2 ஆண்டுக்குள்ளாக பணிகள் நிறைவடையும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

முன்னதாக சட்டப்பேரவையில் பல்லாவரம் உறுப்பினர் கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை முழுவதும் 8 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் 6,532 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டிற்குள் இத்திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.