சென்னை:  மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னை தலைமையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிற கட்சிகள்  தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

மேலும், இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த  கூட்டத்தில் அதிமுக, விசிக, பாமக, தவெக உள்ளிட்ட 58 கட்சிகள் பங்கேற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  பின்னர் 63 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து,  இந்த கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் தொகு மறுசீரமைப்புக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டுவந்து உரையாற்றினார். அப்போது,  தொகுதி மறு வரையறை என்னும் கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது. அதனால், தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் 31ஆக குறையும் ஆபத்து உள்ளது. அதனால்தான்   தமிழர்களின் உரிமையை காக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று கூறியதுடன்,  மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.  என  அனைத்துகட்சி கூட்டத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின்  கூறினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  தீர்மானத்திற்கு ஆதரவாக  கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகள் தங்களது கருத்தை பதிவு செய்தனர். இதையடுத்து,   தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  பேசும்போது, ” பிற மாநில மக்கள் தொகையுடன் தமிழக மக்கள் தொகையை ஒப்பிட்டு புள்ளி விவரங்களுடன் பேசினார். மேலும் அவர், ” மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் எந்த முடிவையும் ஏற்போம்” என்றார்.

பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் எதிர்க்க வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனியாக போராடினால் தீர்வு கிடைக்காது. பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும்” என்றார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ” தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும்” என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  பேசும்போது, ” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான சக்தியாக நாம் உருவாக வேண்டும். தொகுதி அரசியல் அமைப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க வேண்டும். ஒத்த கருத்து கொண்டவர்களை நாம் ஒன்றிணைத்து மாநிலங்களின் உரிமைக்காக போராடி வேண்டியது அவசியம். பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மறுவரையறையை சர்வாதிகாரத்துடன் செயல்படுத்த நினைக்கின்றனர்” என்றார்.

கம்யூனிஸ்டு கட்சிகள்  தொகுதி மறுவரையறை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது அதை வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். மத்திய அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை, எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது; மிகச் சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட்மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த  அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய பாஜக கூட்டணி கட்சிகள் பங்கேற்காத நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.