நியூயார்க்
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் எடி15, கோவ்2.5 என்னும் தடுப்பூசியும் ஒன்றாகும். இந்த மருந்தின் முதல் கட்ட பரிசோதனையில் எதிர்ப்பு சக்தியை மருந்து உருவாக்கி உள்ளதாக நிறுவனம் தெரிவித்து இருந்தது.
தற்போது இந்த மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இவ்வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடத் தொடக்கத்தில் இந்த மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையை நெருங்கும் எனத் தெரிவித்த ஜான்சன் நிறுவனம் இறுதிக்கட்ட சோதனையில் 60,000 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
ஆனால் இரண்டாம் கட்ட சோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனையைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தன்னார்வலர் உடல் நலப் பாதிப்பு குறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.