வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை அகற்றும் வகையில், 1.9 டிரில்லியன் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பில், நிவாரண திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.

இதனையடுத்து, இத்திட்டம் குறித்து விவாதிக்க, குறிப்பிட்ட மாகாண ஆளுநர்கள் மற்றும் மாநகர மேயர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடனான கூட்டம், அதிபர் மாளிகையிலுள்ள ஓவல் அலுவகத்தில் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், கொரோனா பாதிப்புகளால், பல மாகாணங்களில் வேலையிழந்த ஏராளமானோருக்கு தேவையான நிவாரண உதவிகளை அளிக்க முடியுமென்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கொரோனா காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை திறப்பதற்கும் இத்திட்டம் பயன்படவுள்ளது.

குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்ட நிவாரணத் தொகையைவிட, கூடுதலாக சேர்த்து அறிவித்துள்ளார் ஜோ பைடன். ஏனெனில், கடந்தாண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது அமெரிக்கா.

பைடனின் நிவாரணத் திட்ட தொகைக்கு அனுமதியளிக்கும்படி, அமெரிக்க காங்கிரசுக்கு 400க்கும் மேற்பட்ட மேயர்கள் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்கள். ஆனால், சிறிய நிவாரண தொகைக்கு மட்டுமே காங்கிரசிலுள்ள குடியரசு கட்சியினர் ஆதரவளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.