டோக்கியோ:
ப்பானில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் டோஹோகு மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத் தாக்கியது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த நிலநடுக்கத்தால், புகுஷிமா மாகாணத்தில், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், டோக்கியோவிலிருந்து வடக்கே சுமார் 220 கிலோமீட்டர் (135 மைல்) தொலைவில் உள்ள புகுஷிமா கடற்கரையில் இந்த நிலநடுக்கத்தின் மையம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

ஹமடோரி பகுதியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா நம்பர் 1 அணு மின் நிலையம் உள்ளது என்ற போதும், இந்த அணு மின் நிலையத்திற்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 2011 பேரழிவுகள் முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, உடனடியாக சேதங்களை மதிப்பிடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். இதுமட்டுமின்றி நிலநடுக்கத்தை ஆய்வு செய்ய அரசாங்கம் சார்பில் ஒரு குழுவும் அமைக்கபட்டுள்ளது.