வாஷிங்டன்

ஜோ பைடன் வாக்காளர் குழுவில் அதிக அளவில் வாக்குகள் பெற்றதை அடுத்து  அமெரிக்க அதிபராகப் பங்கேற்க உள்ளது உறுதி ஆகி உள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.   ஆனால் அவருக்கு எதிரான வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இதுவரை பிடிவாதமாக உள்ளார்.  பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தோல்வி அடைந்தும் டிரம்ப் தனது பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அமெரிக்கத் தேர்தல் முறைப்படி மக்கள் தொகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள எலக்டொரல் காலேஜ் என்னும் வாக்காளர் குழு வாக்களிப்பு நேற்று முன் தினம் நடந்தது,.  இதில் 530 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்த வாக்களிப்பு ஹவாய் தவிர மற்ற மாகாணங்களில் நடந்துள்ள நிலையில் ஜோ பைடன் 270க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று டிரம்ப்பை விட முன்னணியில் வந்துள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான முடிவுகள் ஜனவரி 6 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது.  எனவே வரும் ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராகப் பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இனியாவது ஜோ பைடன் அதிபர் ஆவாரா என்னும் கேள்விக்கு தற்போது உறுதியான விடை கிடைத்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.