டில்லி

டந்த 2016 ஆம் வருடம் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2 முதல் 3% வரை வேலை இன்மை ஏற்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு பிரதம்ர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து ஒரே இரவில் ரூ.500 மற்றும் ரூ,100 நோட்டுக்களைச் செல்லாததாக மாற்றினார்.   இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 86% செல்லாதவை ஆகியது.  கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்கவும், இந்திய வர்த்தகத்தை முன்னேற்றவும் இந்த நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்களை மாற்றப் பல லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று அவதியுற்றனர்.   ஒரு சில முதியவர்கள் வரிசையில் நிற்கும் போது மரணம் அடைந்த செய்திகளும் வெளியாகின.     சமீபத்தில் இந்நிலை குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கேப்ரியல் சோடரொ மற்றும் ஐ எம் எஃப் ஐ சேர்ந்த கீதா கோபிநாத் ஆகியோர் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையில்,”நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது.   இந்த நடவடிக்கையால் ரொக்கப் பணம் இல்லாத நிலையில் வேறு ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்தன.   கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும் புழக்கத்தில் இருந்த அத்தனை ரொக்கமும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்த காலகட்டமான 2016 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 2-3% பேர் பணிகளை இழந்துள்ளனர்.   அதாவது வேலை இன்மை அதிகரித்துள்ளது.   இதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு ரொக்கம் புழக்கத்தில் இல்லாததே ஆகும்.    குறிப்பாக தினசரி ஊதியம் பெறுவோரில் பலர் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி போதுமான அளவு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை.    இந்த அறிவிப்பு வந்த உடனேயே பலரும் செல்லாத நோட்டுக்களை மாற்றச் சென்ற போது அவர்களுக்குத் தேவையான அளவு ரொக்கப்பணம் கிடைக்காத நிலை இருந்துள்ளது.    இந்த பணப்புழக்கம் சரியாக சில மாதங்கள் ஆன நிலையில்  அந்த மாதங்களில் மக்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.