புதுடெல்லி: மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும், மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவை இடங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும் கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா.

கடந்த 1971ம் ஆண்டின் நிலைமையோடு ஒப்பிடுகையில், தற்போது எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்று அவர் கூறியுள்ளார்.

மக்களவை இட எண்ணிக்கை மாற்றத்தின் மூலம் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் மேலும் அதிக இடங்களைப் பெற்று, இன்னும் கூடுதலான அரசியல் முக்கியத்துவம் பெற்றால் அது முற்றிலும் நியாயமே என்று கூறியுள்ளார் அவர். அதேசமயம், சில மாநிலங்கள் தங்களின் இடங்கள் சிலவற்றை இழந்தாலும் அதுவும் ஏற்கக்கூடியதே என்றுள்ளார் அவர்.

“சில மாநிலங்கள் சில இடங்களை இழப்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் சரிசமமான மக்கள்தொகை இருப்பது அவசியம். உத்திரப்பிரதேசம் போன்ற மிகப்பெரிய மக்கள்தொகை உள்ள மாநிலத்தில், பல நிலைகளில் பின்தங்கியுள்ள மாநிலத்தில், குறைந்தளவு இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.