முகேஷ் அம்பானியின் ஜியோ 4ஜி சேவை பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
6 மாதங்கள் இலவச சேவை வழங்கியதால், தற்போது புதியதாக தொடங்கப்பட இருக்கும் டிடிஎச்-லும் இலவச சேவை கிடைக்கும் என்று வதந்திகள் பரவி பொதுமக்களை குழப்பி வருகின்றன.
இதுகுறித்து பல்வேறு போலியான அறிவிப்புகள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ரிலையன்ஸ் சார்பாக அறிவிக்கப்பட இருக்கும், ஜியோ டிடிஎச் சேவைகளும் முதல் ஆறு மாதங்களுக்கு இலவச மாக வழங்கப்படும் என்று பல்வேறு புகைப்படங்களும், அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.
மேலும், ஜியோ டிடிஎச் சேவைக்கு பதிவு செய்யக் கோரும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள இணைய முகவரியில் ஜியோ பிரைம் டிடிஎச் சேவை மூலம் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக பெறுங்கள் என்ற தகவல் இடம்பெற்று உள்ளது.
அதில், ஜியோ டிடிஎச் அறிமுக சலுகையின் கீழ் முதல் ஆறு மாதங்களுக்கு இலவச சேவை என்றும், அத்துடன்ன் 432 டிவி சேனல்களும், 350க்கும் அதிகமான சாதாரண சேனல்களும், 50க்கும் அதிகமான எச்டி சேனல்களும் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை பொதுமக்கள் நம்பும்விதமாக, ஏற்கனவே 1.7 மில்லி யன் நபர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் ஆசை காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஎச் சேவையில் பதிவு செய்யும் பகுதி இடம்பெற்றுள்ளது. இதில் பெயர், மொபைல் நம்பர் மற்றும் மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை வழங்கி பதிவு செய்வதற்கான பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இதை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்..