ஜார்க்கண்ட் முதல்வராக ஜெ.எம்.எம். கட்சியைச் சேர்ந்த சம்பை சோரன் இன்று பிற்பகல் பதவியேற்றக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் புதன்கிழமையன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பை சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 43 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க புதனன்று மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினர்.
இந்த கோரிக்கை குறித்து எந்த ஒரு பதிலும் வராத நிலையில் ஜெ.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்குவாங்க முயற்சிப்பதாக பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து ஜெ.எம்.எம். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அழைத்துச் செல்ல விமானத்தில் ஏற்றிய நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் காவல்துறையினர் பாதுகாப்புடன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று மீண்டும் சந்தித்த சம்பை சோரன் முதல்வர் இல்லாமல் மாநில நிர்வாகம் முடங்கிப்போயுள்ளதை சுட்டிக்காட்டி ஆட்சி அமைப்பதற்கான தனது உரிமை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட சம்பை சோரனுடன் மேலும் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
சம்பை சோரனுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலம் மற்றும் ஆர்.ஜே.டி.யைச் சேர்ந்த சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஷிபு சோரனுடன் இனைந்து போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவரான சம்பை சோரன், ஷிபு சோரன் மட்டுமன்றி அவரது மகன் ஹேமந்த் சோரனுடனும் நெருக்கமாக இருந்தவர்.
10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதில் 3 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பிற்படுத்தோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
முதல்வராக பதவியேற்றுள்ள சம்பை சோரன் தனது பலத்தை நிரூபிக்க 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது ஆதரவு எம்.எம்.ஏ.க்கள் 43 பேர் இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டனர்.