நில மற்றும் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம் டெல்லி சாந்தி நிகேதனில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது வரை அங்கேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் ஹேமந்த் சோரன் அங்கு இருந்தாரா அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து எந்தவிவரமும் வெளியிடப்படவில்லை.
அதேவேளையில், ஜனவரி 27 முதல் 31ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்துள்ள ஹேமந்த் சோரன் 31ம் தேதி தனது வீட்டிற்கு வந்து விசாரிக்குமாறு இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், சோரனிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை ராஞ்சியில் உள்ள இல்லத்திற்கு செல்வார்களா அல்லது டெல்லியில் உள்ள வீட்டிற்கு செல்வார்களா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.
டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருவதை அடுத்து ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் பெருமளவு திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள முதல்வர் வீடு, அலுவலகம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் என அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் மாளிகை மற்றும் பாஜக அலுவலகம் முன்பு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த அந்த கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளை குறிவைத்து பாஜக அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஜார்க்கண்ட் முதல்வர் மீதான இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.