சென்னை:
இன்று 2வது முறையாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனநர் அய்யப்பன் விசாரணை ஆணையத்தில் ஆஜரான நிலையில், ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடல்நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு 201ஆம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதன் காரணமாக அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து சுமார் 35க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள ஆணையம், ஜெ.வின் கார் டிரைவர் அய்யப்பனிடம் இன்று இரண்டாவது முறையாக ஆஜராக அறிவுறுத்தியது.
அதன்படி இன்று அய்யப்பன் தனது வழக்கறிஞர்களுட்ன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். விசாரணை முடிந்து வெளியே வந்த அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
1991ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றி கொண்டிருந்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.
அவர் சிகிச்சை பெற்று வந்த 75 நாளும் நானும் மருத்துவமனையில் தான் இருந்தேன், ஆனால் 3 முறை தான் ஜெயலலிதாவை பார்த்தேன்என்றார்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டார் என்ற அய்யப்பன், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி வார்டுக்கு மாற்றும் போதும் ஜெயலலிதாவை சந்தித்தேன் என்றார். மேலும், ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுவது தவறானது என்றவர், ஜெயலலிதா இறந்தப்பிறகு அவரது கால் கட்டை விரல்களை கட்டுவது போன்ற இறுதிச் சடங்குகளை நான்தான் செய்தேன் என்று கூறினார்.
சசிகலாவின் வழக்கறிஞர்களுடன் வந்த ஜெ. கார் டிரைவர் அய்யப்பன் அவர்கள் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவித்தது செய்தியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.