சென்னை,

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம்,  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மேலும்,  அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கும் சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 17ந்தேதி முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து  முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெ. மரணம் குறித்து 22ந்தேதி வரை பிரம்மான பத்திரம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலருக்கு சம்மனும் அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெ. மரணம் தொடர்பாக, அவருக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளித்து வந்த லண்டன் டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.

மேலும், அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றுவந்தபோது இட்லி சாப்பிட்டார், நன்றாக இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் கொடுத்த தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் சம்மன் அனுப்ப விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுக சாமி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு  வசதியாக, கூடுதல் அதிகாரம் கேட்டு, கமிஷன் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.