திருச்செந்தூர்: ‘நகையே இல்லாமல் நகைக்கடன்ங’ வழங்கியதாக  கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குரும்பூரில் இந்த மாபெரும் மோசடி அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கும், நெல்லைக்கு இடையே உள்ளது குரும்பூர். இந்த பகுதியில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயம் பெருமளவில் நடைபெறுவதால், விவசாயிகள் தங்களது தேவைக்கு இந்த வங்கியையே நாடுகின்றனர். இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.

தற்போது திமுக அரசு, நகைக்கடன் தள்ளுபடி என்று அறிவித்து  உள்ளது. தமிழக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் 5 பவுன் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கான அறிவிப்பையும் முதல்வர் சட்டமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரில் வெளியிட்டார்.

அதன்படி, விவசாயிகள், ஏழை, எளிய மக்களின் 5 பவுன் நகை நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இந்த தள்ளுபடி பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.  நகைக்கடன் விவரங்கள் ஆராயப்பட்டு உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதுபோல குரும்பூர்  அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,  வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து, அதில் நகை இருப்பதுபோல கூறி, கடன் வாங்கப்பட்டு இருப்பது ஆய்வின்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

நகைக்கடன், விவசாய கடன், தனிநபர்கடன் என 500-க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும், வங்கியில் நகை கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.

இது தொடர்பாக வங்கியின் தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார்குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான ‘பாண்ட்’ பத்திரம் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அங்கு மொத்தம் நகை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 548. ஆனால் 261 பேரின் நகை பைகள் அங்கு இல்லை. இதன் மூலமாக நகையே இல்லாமல் ரூ2.3 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பது அம்பலமாகியுள்ளது.

நகையே இல்லாமல் நகைக்கடன் பெற்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.