புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையே தற்போது நிலவிவரும் வர்த்தகப் போரின் விளைவாக, சீனாவில் செயல்பட்டுவரும் பல உலகளாவிய நகை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் நிறுவனத்தை இந்தியாவிற்கு மாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சீனா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே நிலவும் பொருளாதாரப் போரில், சமநிலையைப் பாதுகாக்க, உற்பத்தி நிறுவனத்தை இந்தியாவிற்கு மாற்ற பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நகை தயாரிப்பு நிறுவனங்களை சீனாவிலிருந்து மாற்றுவதற்கு இந்தியாதான் இயற்கையான ஒரு இலக்கு என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து நகை தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்கு மாறுவதால் இந்தியாவில் அத்தொழில்துறை பெரிய வளர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.

சமீப மாதங்களில், இந்தியாவில், அத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான பணப்புழக்க நடைமுறைகளாலும், வங்கி மோசடிகளாலும் இந்த தொழில் மிகவும் நசிவடைந்துள்ளது. இந்திய ஏற்றுமதியில் இத்தொழிலின் பங்களிப்பு 15%.

இந்தியாவில் இத்தொழிலைப் பொறுத்தவரை, பல அனுபவமிக்க பணியாளர்கள் கிடைப்பார்கள் என்பதாலும், இத்தொழிலில் பல பத்தாண்டு அனுபவங்கள் இந்தியாவிற்கு இருக்கிறது என்பதாலும், சீனாவிலிருந்து இடமாறி வரும் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.