மும்பை:

ஏர்ஜெட் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மனுவை மும்பை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.


ஜெட் ஏர்வேஸின் பங்குச் சந்தை விலை கடந்த ஓராண்டில் 86% சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 30% பங்குச் சந்தை விலை குறைந்துள்ளது.

இந்நிலையில், ஜுன் 21-ம் தேதி மும்பை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தாக்கல் செய்த மனுவில், ஜெட் ஏர்வேஸை திவாலானதாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், இது தொடர்பான ஆவணங்களை ஜுலை 5-ம் தேதிக்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்குமாறு ஐஆர்பியை கேட்டுக் கொண்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஜெட் ஏர்வேஸ் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 22 வங்கிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் ரஜனீஷ் குமார் இது குறித்து கூறும்போது, கடன் கொடுத்த அனைத்து வங்கிகளின் சார்பாக, ஏர்ஜெட் நிறுவனத்துக்கு எதிராக திவாலானதாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகே ஒவ்வொரு முடிவும் எடுக்கப்பட்டது என்றார்.

ஜெட் ஏர்வேஸை திவாலானதாக அறிவிக்கக் கோரும் மனுவை, மும்பை தீர்ப்பாயம் ஏற்றபின், அந்நிறுவனத்தின் பங்கு விலை சற்று சாதமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.