புதுடெல்லி:

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா ராஜ்யசபையில் நிறைவேற உள்ளது.

1988 ஆண்டுக்கு பிறகு மோட்டார் வாகன சட்டத்தில் பெரிய அளவுக்கு மாற்றம் செய்யப்படவில்லை.

மோட்டார் வாகன சட்ட திருத்தம் ராஜ்ய சபாவின் ஒப்புதலைப் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே மக்களவையில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் பெரிய மாற்றமாக, வாகனம் ஓட்டும்போது செய்யும் குற்றங்களுக்கு பெரிய அளவிலான அபராதம் விதிக்கப்படும்.

தற்போது லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் இந்த அபராதத் தொகை ரூ. 5,000 -ஆக உயர்த்தப்படுகிறது.

வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தை மீறி இயக்குவதற்கு விதிக்கப்பட்டு வரும் ரூ. 400 அபராதம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுவதற்கு விதிக்கப்படும் ரூ 100 அபராதம், தற்போது ரூ 1,000 – ஆக உயர்த்தப்படும்.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கினால் அல்லது அதிவேகத்தில் வாகனத்தை இயக்கினால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகை தற்போது 5 ஆயிரமாக உயர்த்தப்படும். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம், ரூ. 2,000 -லிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

அதேசமயம், விபத்துகளிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் மோதி விட்டு விரைந்து செல்வோருக்கு விதிக்கப்படும் ரூ. 25 ஆயிரம் அபராதம் ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.

ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படும். ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட உள்ளது.

புதிய இன்சூரன்ஸ் விதிகளின்படி, கார்களில் இன்ஜின் பழுதானால் அதற்கு தயாரிப்பு உற்பத்தியாளர்கள் நஷ்ட ஈடு தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விபத்துகளில் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும். ஆனால் இழப்பீடு கோர ஆறு மாத காலம் ஆகும்.

இந்த சட்டத்திருத்தம் சாலை வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.