டில்லி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா(சிஏபி)வுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்ததை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விவாதம் நடத்தின. இந்த எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் மசோதா ஒப்புதல் பெற்றது. இந்த மசோதாவுக்குப் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவை அளித்துள்ளது.
ஆனால் இந்த ஆதரவு கட்சித் தலைவர்கள் இடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா உள்ளிட்டோர் இந்த மசோதாவைக் கட்சி ஆதரித்ததற்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது ஐக்கிய ஜனதா தள வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டரில், ” மதத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கான உரிமையைப் பாகுபடுத்தும் சிஏபி ஐ ஐக்கிய ஜனதா தளம் ஆதரிப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தேன். மதச்சார்பற்ற என்னும் வார்த்தையை முதல் பக்கத்தில் மூன்று முறை கொண்டுள்ள ஒரு கட்சியின் அரசியலமைப்புக்கும் காந்திய கொள்கைகளால் வழிநடத்தப்படும் என்று கூறப்படும் கட்சியின் தலைமைக்கும் இது முரணானது” எனப் பதிந்துள்ளார்
பிரசாந்த் கிஷோரின் இந்த பதிவைத் தொடர்ந்து இன்று கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான பவன் வர்மா, “மாநிலங்களவையில் சி ஏ பி க்கு அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்யுமாறு நிதிஷ்குமாரைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது, பாரபட்சமானது, மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரானது, தவிர, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது. காந்திஜி அதைக் கடுமையாக மறுத்திருப்பார்.” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]