சென்னை

சிவாஜி கணேசனின் அன்னை  இல்ல வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் தொகையை திருப்பித் தராததால், கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

பட உரிமைகளை வழங்காததால் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் உயர்நீதிமன்றம் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து உத்தரவு பிறப்பித்ததற்கு வெகு காலம் முன்பே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பத்திரப் பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துஷ்யந்தின் தந்தை ராம்குமார் இந்த அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். கடன் அளித்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான அன்னை இல்லம் வீட்டை ராம்குமார் தனது உரிமையை விட்டுக்கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. இந்த ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்