திருவாரூர்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை அடுத்து அவர் பிறந்த கிராமமான இருள்நீக்கி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் வட்டத்தில் உள்ள இருள் நீக்கி கிராமத்தில் ஜெயேந்திர சரஸ்வதி 1935ம் ஆண்டு பிறந்தார். இந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது.
1954ம் வருடம் தனது 19ம் வயதில் காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதியாக அவர் சேர்ந்தார். பிறகு 1994ம் வருடம் தனது 69ம் வருடம் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் சற்றுமுன், ஜெயேந்திரர் மறைந்த தகவல், இருள் நீக்கி கிராமத்தை எட்டியது. இதையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
மடாதிபதியாக பொறுப்பேற்றாலும் தனது சொந்த ஊருக்குத் தேவையான உதவிகளை அவர் செய்து வந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
“எங்களது சிறிய ஊரில் பிறந்தவர் உலகம் முழுதும் அறியப்பட்டவராக இருந்தார். அவர் மறைந்தது வேதனை அளிக்கிறது” என்று அம்மக்கள் தெரிவித்தார்கள்.
மேலும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்த சென்னைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.