சித்தூர்:

சித்தூர் அருகே கார் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் போலீசார் அந்த காரை கைப்பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

சித்தூர் மாவட்டம் , ஆரோம் கிராமத்தில்  சாலையோரத்தில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று பலநாட்களாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் கார் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் , காரின் கதவை திறந்து அங்கிருந்த  ஆவணங்களை சரிபார்த்தனர். ஆவணங்களில் இந்த காரின் பதிவெண் டி.என்.07 வி-1948 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார், இந்த கார் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை ஊர்ஜிதப்படுத்தினர்.

இந்த காரை சிறிது காலம் பயன்படுத்திய ஜெயலலிதா வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.