சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடையாக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லை அரசுடமையாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. தொடர்ந்து, அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 68 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியது.

இதை எதிர்த்து, ஜெ.வாரிசுகளான தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதையடுத்து  வேதா இல்லம், தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, வேதா இல்லத்துக்கு ஒதுக்கிய இழப்பீட்டுத் தொகையையும்  திரும்பப் பெற்றுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும், மேல்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை எனவும் கூறியது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க தமிழக அரசு கையகப்படுத்தியதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.