நல்லது, கெட்டது.. இரண்டுக்குமே உதாரணம்

முந்தைய கட்டுரையில் தவிக்குது தயங்குது ஒரு மனசு, என்றும், நிஜமாகவே நதியை தேடிவந்த கடல் என்று குறிப்பிட்டிருந்தோம்..

1980ல்புதுப்படங்ளை ஒப்புக்கொண்டு திரையுலக வாழ்க்கையை தொடர விரும்பாமல் தவிக்குது தயங்குது ஒரு மனசு என்று இரண்டு ஆண்டுகளால் தவிப்பில் இருந்தவர் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா என்கிற நதியை தேடிவந்தது, எம்ஜிஆர் என்கிற கடல்..

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் பட்டிக்காட்டு பொன்னையாவோடு படத்திலிருந்து பிரிந்த நடிகை ஜெயலலிதாவுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அழைப்பு கிடைத்தது முதலமைச்சர் எம்ஜிஆரிடமிருந்து.

பல்வேறு கட்டாயங்களால் ஜெயலலிதாவை ஒதுக்கி வைத்திருந்த எம்ஜிஆரால் நிரந்தரமாக அப்படி இருக்கமுடியவில்லை.. தன் அளவுக்கு கட்சியில் உள்ள மற்ற தலைவர்களால் கூட்டத்தை சேர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஜெயலலிதாவை  திருப்பி அழைத்த எம்ஜிஆர், நடிகை என்ற அவதாரத்தை கலைத்து அவருக்கு அரசியல்வாதி என்ற வேறொரு மகுடத்தை சூட்டினார்.

அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.. கடலூரில் அரசியல் அரங்கேற்றம்… அங்கே போன ஜெயலலிதா தொண்டர்கள் மற்றும் நடிகையை காண வந்த கூட்டம் என மக்கள் வெள்ளத்தில் கலக்கினார்.. திமுக நாளேடான முரசொலி, ‘கடலூர் கார்ப்பெட்’ என்று விமர்சித்தது..

எம்ஜிஆர் – ஜெயலலிதா இடையிலான நெருக்கம் மீண்டும் தூசியெடுக்கப்பட்டு திமுகவின் அரசியல் பொதுக்கூட்டங்களில் சகட்டுமேனிக்கு விளாசப்பட்டது..

எனினும் ஜெயலலிதா எதைப்பற்றியும் கவலைப்படாமல் அரசியல் சொல்லடிகளை தாங்கிக் கொண்டு பக்குவப்பட்டுப் போனார்..இதற்கு பலனும் கிடைத்தது..

1984 மார்ச் 24ல் இன்ப அதிர்ச்சி.. அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக நியமனம்.. ராஜ்ய சபாவில், எம்ஜிஆரின் அரசியல் ஆசான், அறிஞர் அண்ணா உட்கார்ந்த அதே இருக்கை ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.. அருமையான ஆங்கிலத்தில் நேர்த்தியாக இருந்தது அவரது கன்னிப்பேச்சு.. சபையே வியப்பாக பார்த்தது.

‘’அறிவுடன் கூடிய பேரழகு எம்பி’’ என்று வர்ணித்தார் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்.. பிரதமர் இந்திரா காந்தியையும் ஈர்த்துவிட்டது கன்னிப்பேச்சு

எம்ஜிஆரின் கட்டளைப்படி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின் நோக்கம், 1980ல் தனது ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியை தன் பக்கம் கொண்டுவருவது என்று எம்ஜிஆர் நினைத்ததுதான்.. அதாவது, காங்கிரசுடன் அதிமுகவுக்கு கூட்டணிக்கான பாலத்தை அமைப்பது. கடைசியில் அது அப்படியே நிறைவேறவும் செய்தது. நாட்டின் தந்திர பூமி என்ற வர்ணிக்கக்கப்படும் டெல்லியில், மைய அரசியல் அத்துப்படியாகும்போது ஜெயலலிதாவுக்கு வயது வெறும் 36தான்..

அதனால்தான் எம்ஜிஆர் உடல் நலிவுற்று சென்னை அப்பல்லோ, நியுயார்க் புரூக்ளீன் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்ற கால கட்டங்களில் தன்னை அரசியலை விட்டே வெளியேற்றத்துடித்த சக்தி களை வெற்றிகரமாய் எதிர்த்து களமாட முடிந்தது..

1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரு அணிகளாக அதிமுக சிதறுண்டு கேள்விக்குறியானது.. கட்சியின் பெரும் தலைவர்களெல்லாம் எம்ஜிஆரின் மனைவி வி.என்,ஜானகி பக்கமே நின்றார்கள்.. அவரை முதலமைச்சராகவும் ஆக்கினார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் அனுதாபம்கூட ஜானகி பக்கமே இருந்தது.

ஆனாலும் ஜானகி ஆட்சி கவிழ்ந்து 1989ல் சட்டமன்ற தேர்தல் வந்தபோது எம்ஜிஆரின் மனைவி ஜானகியையே எதிர்த்து அரசியல் களத்தில் வாளை சுழற்றினார் ஜெயலலிதா.. தேர்தலில் அவர் அணி திமுகவுக்கு எதிராக வெற்றிபெறாவிட்டாலும் அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களும் அபிமானிகளும் ஜெயலலிதா பக்கமே என நிரூபிக்கப்பட்டுவிட்டது.

வி.என்.ஜானகியே சட்டமன்ற தேர்தலில் தோற்றுப்போய் ஒதுங்கிவிட, முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டு ஒன்று பட்ட அதிமுகவை கட்டமைத்தார் ஜெயலலிதா..

அதேவேகத்தில், 10 மாதங்கள் கழித்து நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பின்னடைவை சந்தித்தது..ஆனால் தமிழகத்தில் மட்டும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றியது..

இரட்டைஇலை சின்னத்தை பெற்று முதன்முதலில் மக்களவை தேர்தலில் தன் அசூர பலத்தை காட்டினார் ஜெயலலிதா..ஒரு தொகுதியியில் கூட திமுகவால் ஜெயிக்கமுடியவில்லை. முன்னெப்போதும், திமுக அப்படியொரு வீழ்ச்சியை கண்டதில்லை..

திமுக சுதாரித்து எழுந்திருப்பதற்குள் 1991ல் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலிலேயே வென்று ஆட்சியை அமைத்துவிட்டார்.. 234 இடங்களில் அதிமுக கூட்டணி 225 இடங்களை கைப்பற்றியதும் புதிய சாதனையாக பேசப்பட்டது…

ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆகும்போது அவருக்கு வயது வெறும் 43தான். இவ்வளவு இளம் வயதில் அதுவும் ஒரு பெண், முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்த வரலாற்று அதிசயத்தை தமிழகம் முதன் முறையாக கண்டது..

பெண் சிசுக்கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை அவர் கொண்டுவந்தபோது எம்ஜிஆரின் பாணியிலேயே அடித்தட்டு மக்கள் நலன் சார்ந்தே ஆட்சிபோகிறது என்று பலரும் புகழ்ந்தனர். மகளிர் காவல் நிலையங்களை அவர் உருவாக்கிபோது வெளிநாடுகளிலும் ஜெயலலிதாவின் ஆட்சி பேசப்பட்டது..

ஆனால் இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களை எதிர்த்தால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்ற தொணியில் ஆசிட் வீச்சு, அதிரடி கைதுகள் உட்பட பல திகைப்பான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன..

தனது நெருங்கிய தோழியான சசிகலா, குடும்பம் மற்றும் உறவினர்கள் சகிதமாய் ஆட்சியில் முறைமுக அதிகாரம் செலுத்தியதை ஜெயலலிதா வேடிக்கை பார்த்தாரே தவிர கட்டுப்படுத்த விரும்பவேயில்லை..

கும்பகோணம் மகா மகத்தில் சசிகலாவோடு சேர்ந்து நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் 54 பேர் பலியாகி நாடே உக்கிரமான பார்வை பார்த்தபோது ஜெயலலிதா அதை பொருட்படுத்தவே யில்லை..

எல்லாவற்றையும்விட வளர்ப்பு மகன் என சசிகலாவின் உறவினர் சுதாகாரனை தத்தெடுத்து அவருக்கு 100 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பர திருமணத்தை பார்த்து முகஞ்சுளிக்காதவர்களே கிடையாது.. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே, ஆட்சி அதிகாரத்தை கையாளுவதில் உள்ள வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது..

1996ல் கருணாநிதியில் ஆட்சியின்போது ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினர் மற்றும் அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் என ஏராளமானோர் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டது..

கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது கூட ஜெயலலிதா இந்த வழக்குகளை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.. ஆனால் 2000, அக்டோபர் 9ந்தேதி டான்சி வழக்கில் சிறை தண்டனை என தீர்ப்புவந்தபோது உண்மையிலேயே ஆடிப்போனார். சட்டப்படி தேர்தலில் அவர் போட்டிகூட போடமுடியாத பரிதாபமான கட்டத்தையும் சந்தித்தார்.

2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றாலும், எம்எல்ஏவாக இல்லாத ஜெயலலிதா, அவசர அவசரமாக பதவியேற்றார்..ஆனால் சட்டத்தின்முன் அவர் ஆட்டம் செல்லுபடியாக வில்லை.. உச்சநீதிமன்றத்தாலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதுமாதிரியான அவமானத்தை சந்தித்தார்.

முதலமைச்சர் பதவியை ஓ.பிஎஸ் என்கிற சாதாரண எம்எல்வுக்கு தந்துவிட்டு அரசியல் சாசனத்தை ஒன்றும் செய்யமுடியாமல் பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போனார்..

இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு மங்கவேயில்லை..அதேபோல அவருடைய வில்லங்கமான செயல்களுக்கு நீதித்துறையிலிருந்து அடிமேல் அடி விழுவதும் நிற்கவேயில்லை…

2014ல் முதலமைச்சராக இருந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்புவந்தது.. மறுபடியும் பதவி பறிபோனது. இந்தியாவல் முதலமைச்சராக இருக்கும்போதே இரண்டு முறை நீதிமன்றத்தால் பதவி பறிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதான் என்ற வரலாற்று களங்கத்திற்கு ஆளானர்..

சட்டச்சிக்கல்களில் தற்காலிமாக தீர்வுபெற்று, தமிழத்தில் எம்ஜிஆருக்கு அடுத்தபடி தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட சாதனையையும் அவர் 2016 தேர்தலில் நிகழ்த்திகாட்டினார்.. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா அளித்த நான்காண்டு சிறையை  கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்தபோது ஜெயலலிதா உயிரோடு இல்லை..டிசம்பர் 5ந்தேதியே இயற்கையிடம் போய்ச்சேர்ந்துவிட்டார்..

சட்டத்தின்முன் பலமாய் தோற்றுப்போன ஜெயலலிதா, அரசியல் உலகில் சாதனையாளராகவே திகழ்ந்தார்..  மக்களவையில் ஆளும் பாஜக, காங்கிரசுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை முன்னேற்றிய பெருமை அவருக்கே உண்டு… 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே சின்னம் இரட்டை இலை என்ற சாதனையை அவரால் சாதாரணமாக படைக்கமுடிந்தது..

அவர் கொண்டுவந்த ஏழைப்பெண்கள் திருமணத்திற்கு பவுன் தங்கத்தாலி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் உதவி, பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்டாப், அம்மா உணவகம் என பல சமூக நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்..

எடுத்தால் முடிப்பது என்ற வகையில் புதிய வீராணம், நேரு ஸ்டேடியம், மற்ற மாநிலங்களுடன் சட்டப் போராட்டம், மாநில சுயாட்சிக்கு வேட்டுவந்தால் கடுமையாக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்பது என பல அதிரடிகளுக்கு சொந்தக்காரர் என்ற வகையில் பாராட்டை பெறுவதற்கு தகுதியானவர் ஜெயலலிதா..

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எவருமே சுலபத்தில் அணுகிவிட முடியாது என்ற பெயர் அரசியலில் அவருக்கு பலமாகவும் மக்கள் மத்தியில் பலவீனமாகவும் பார்க்கப்பட்டது.. 2015ல் சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது மூன்று நாட்களாக அவர் மக்களிடம் பேசாமல் இருந்தெல்லாம் எந்த முதலமைச்சரும் இதுவரை செய்யாத ஒன்று.

துணிச்சலான மனோபாவம், நன்மைகளை தேடிக்கொடுத்த அளவை விட அதிகமாகவே தீமைகளையும் வேதனைகளையும் கொடுக்கத்தவற வில்லை..

பொதுவாழ்வில் ஒரு பெண் துணிச்சலோடு போராடினால் எப்பேர்பட்ட உயரத்தையும் அடைய முடியும் என்பதற்கும் ஜெயலலிதான்  உதாரணம்.. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் சரியில்லாத சேர்க்கை என்றால், தானும் அதுவாகி கடைசியில் எதிர்மறையான வரலாறே எழுதப்படும் என்பதற்கும் அவர்தான் சாட்சி.

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன்

(முற்றும்)