சிறப்புக்கட்டுரை: (பகுதி-1)

தாய் சந்தியா, சித்தி வித்யாவதி இருவருமே 1950களில் பிரபலமான நடிகைகள்.. இப்படிப்பட்ட பின்னணி கொண்ட சிறுமி கோமளவள்ளி, சினிமா உலகில் கால்வைத்தது ஒன்றும் ஆச்சர்யமான விஷயமல்ல..

மாயாபஜார்(1957) படத்தில் சந்தியா நடித்தபோது கூடவே ஒரு காட்சியில் அமரவைக்கப்பட்டு எட்டு வயது சிறுமியாக படம் பிடிக்கப்பட்டதை கணக்கில் வைத்து பார்த்தால், பின்னாளில்  பெயர் மாற்றம் பெற்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை, திரையுலகில் முதல் படமே அவரது தாயாரோடே சேர்ந்து துவங்கியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்..

நாட்டியத்தில் தேறியிருந்த ஜெயலலிதாவுக்கு சிறுமியாக இருந்தபோதே  ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்தி பல படங்களில் நடித்து வலம்வர வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கின் முதல் வண்ணப்படமான அமரசில்பி ஜக்கன்னா என்ற படத்தில் இளம் பெண்ணாக ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடும்போது, படத்தின் கதாநாயகி சரோஜாதேவியுடன் அடுத்த சில ஆண்டுகளிலேயே பெரும் போட்டி நடத்தப்போகிறோம் என்பதுகூட ஜெயலலிவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.

ஆனால் இதெற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர் இயக்குநர் பி.ஆர். பந்துலு. இவர் படங்களில் சந்தியாவுக்கு முக்கிய வேடங்கள் கிடைக்கும். இந்த வகையில்தான் பந்துலுவின் கண்ணில் பள்ளி மாணவி ஜெயலலிதா பட்டுவிட, அவரை உடனே சின்னதெகொம்பே (தமிழில் சிவாஜியின் முரடன் முத்து) கன்னட படத்தில் கதாநாயகியாக்கினார்..ஜெயலலிதாவின் முதல் திரையுலக ஜோடி, கல்யாணகுமார்.. படம் சூப்பர் ஹிட்.

சினிமா உலகை பொறுத்தவரை சில தருணங்களில் நடக்கும் விஷயங்களில் அவ்வளவு ஆச்சயர்மாக இருக்கும்..ஒன்றுமே இல்லாத ஆளை எங்கோ கொண்டுபோகும்..எல்லாம் நிறைந்த ஆளை தள்ளிவிட்டுக்கொண்டே இருக்கும்..

அசோகன்- சந்திரகாந்தா நடித்த இது சத்தியம் படத்தில் ஒற்றை பாடலுக்கு நடனமாடினார் ஒரு தேவதை.. அதனை பட்டை தீட்ட ஜாம்பவான் இயக்குநர் கே.சங்கருக்கு தோன்றவில்லை.. ஆனால் இயக்குர் ஸ்ரீதருக்கு தோன்றியது.

வெண்ணிற ஆடை படத்தில் அவரை கதாநாயகியாக்க முடிவு செய்தார். ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.. வாய்ப்பு கிடைக்காத தேவதை இந்தியாவின் கிரேட்டஸ்ட் ஷோ மேன் என வர்ணிக்கப்படும் ராஜ்கபூரின் கண்ணில் பட்டு இந்தியில் நாயகியாக அறிமுகமாகி நாட்டுக்கு கனவுக்கன்னியாக மாறிப்போனார்.. அவர்தான் ஹேமாமாலினி..

இப்படி தமிழில் ஹேமாமாலினிக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை ஜெயலலிதா அற்புதமாக பிடித்துக்கொண்டார்..

பெண்மையின் அத்தனை உணர்ச்சிகளையும் அப்போதுதான பள்ளிப்படிப்பு முடிந்திருந்த மாணவி ஷுட்டிங் ஸ்பாட்டில் வெளிப்படுத்தியபோது டைரக்டர் ஸ்ரீதர்கூட ஆடிப்போய்விட்டார் என்ற தகவல் உண்டு.

ஏற்றுக்கொண்ட விஷயம் எதுவானாலும் அதனை உள்வாங்கி வெற்றிகரமாக வெளிப்படுத்தும் திறமை அவரிடம் தாராளமாகவே இருந்தது..

வெண்ணிற ஆடையில் இரண்டு நாயகிகள்,,இன்னொருவர் நிர்மலா. என்ன விந்தையோ, இருவருக்குமே நிஜத்தில் திருமண கோலமே காணாமல் போய்விட்டது.

வெண்ணிற ஆடை படத்தில் நடித்த ஜெயலலிதாவால் அந்த படத்தை திரையரங்கில் பார்க்க முடிய வில்லை. காரணம், அது கதையின் தன்மைக்காக ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட படம். ஆனால் 18 வயது நிறையாத ஜெயலலிதா, அந்த படத்தில் ரசிகர்களை நடிப்பால் கண் கலங்க வைத்த விதம் அலாதியானது..

கன்னடத்தில் நாயகியாக அறிமுகப்படுத்திய அதே பந்துலுதான் தமிழில் சிவாஜி நடித்த கர்ணன் என்ற மாபெரும் பிரமாண்டத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு தயாரானார். தமிழக அரசியல் களத்தை ஆட்டிவைக்கப்போகிறோம் என தெரியாமல் எம்ஜிஆர் ஜெயலலிதா என்கிற இரு ஆளுமைகள் இந்த படத்தில்தான் இணைந்தார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்தில் படப்பிடிப்புக்கு இடையூறு வரும் என நினைத்து பந்துலு கோவா பகுதியில் படப்பிடிப்பை நடத்தினார்..அதனால்தான் இன்றளவும் அரசியலில் இந்தி எதிர்ப்பு போராட்ட விமர்சனம் வந்தால், இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தபோது, கோவாவில் சினிமா ஷுட்டிங்கில் ஆடிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா என விமர்சிக்கப்படுகிறார்..

ஆயிரத்தில் ஒருவன் படம் ஹிட்டாகி சக்கைபோடு போட்டதை  பார்த்ததும். சின்னப்பா தேவர் தன் படங்களில் எம்ஜிஆருக்கு இனி ஜெயலலிதாதான் ஆஸ்தான நாயகி என்று முடிவுசெய்து உடனே ஒப்பந்ததும் செய்தார்..சரோஜாதேவியுடன் மனக்கசப்பு எற்பட்டு சாவித்ரி, கேஆர்.விஜயா என தடுமாறிய தேவருக்கு ஜெயலிதா லட்டு மாதிரி கிடைத்தார்

மூன்றே வாரங்களில் தயாரான கன்னித்தாய் படத்திற்கு ஜெயலலிதாவின் ஒத்துழைப்பு அப்படியொரு நேர்த்தியான விதத்தில் கிடைத்ததில் எம்ஜிஆர்-தேவர் அண்ட் கோ அகமகிழ்ந்துபோனது..

அதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் பயணம் எம்ஜிஆருடன் நிதானமாக, ஆனால் வெற்றிகரமாக நகரத் தொடங்கியது..1967ல் எம்ஜிஆர் சுடப்பட்டு மறுபிறவி கண்டபோது..அவரின் ஆஸ்தான திரைநாயகி சரோஜாதேவி காணாமல் போகும் கட்டம் வந்தது..அரச கட்டளை படத்தில் ஜெயலலிதாவோடு முதன் முதலாய் சேர்ந்து நடித்த சரோஜாதேவிக்கு எம்ஜிஆருடன் அதுவே கடைசிப்படமாக அமைந்துபோனது.

சரோஜாதேவியின் இடத்தை பலமாக பிடித்துகொண்டு எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்த ஜெயலலிதாவுக்கு திரையுலகில் அப்படியொரு ஜெட்வேகத்தில் ஏறுமுகம்.. 1968ல் எம்ஜிஆரின் படங்கள் வெளியானவை மொத்தம் எட்டு.. அந்த எட்டு படங்களிலுமே ஒரே கதாநாயகி ஜெயலலிதான்..

அடுத்த ஆண்டில் நம்நாடு, அடிமைப்பெண் இரண்டு பிரமாண்டமான படங்கள்.. கூர்ந்து கவனித்தால் இரண்டிலுமே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அரசியல் பேசி அரசியல் செய்யும் படியாக பல காட்சிகள் இருப்பதன் வீரியத்தை உணரமுடியும்..

வசூல் சக்ரவர்த்தியாக இருக்கும் ஒரு டாப் ஸ்டார் நடித்து தொடர்ச்சியாக வெளிவந்த 12 படங்களிலுமே குறிப்பிட்ட ஒருவர்தான் கதாநாயகி என்றால். அவர்களின் ஜோடி ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கவேண்டும்.. ஆம், அப்படிப்பட்ட வரவேற்பால்தான் அரிதான சாதனையை எம்ஜிஆர் படங்களில் ஜெயலலிதாவால் நிகழ்த்த முடிந்தது..

இன்னொரு பக்கம் சிவாஜிக்கு முதல் படத்தில், மோட்டார் சுந்தரம் பிள்ளையின் மகளாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து ஜோடியாக நடித்த ஜெயலலிதா, அங்கேயும் பயணத்தை வெற்றிகரமாக்கினார்..

பத்மினி, சாவித்ரி, சரோஜோதேவி போன்ற வெற்றிக்கொடி பறக்கவிட்ட தமிழ் சினிமா உலகில் 1967-1972 காலகட்டத்தில் ஜெயலலிதான் நடிகைகளில் நெம்பர் ஒன் ஸ்டார்..

இருப்பினும் 70களின் துவக்கத்தில் எம்ஜிஆருடன் ஏற்பட்ட விரிசல் ஜெயலலிதாவுக்கு பின்னடைவை நோக்கித்தள்ளுவதாகவே அமைந்தது..

மக்கள் திலகத்தின் கனவுப்படமான உலகம் சுற்றும் வாலிபனில் வாய்ப்பு கிடைக்காத ஜெயலலிதாவுக்கு பட்டிக்காட்டு பொன்னையா என்ற சுமாரான படம்தான் எம்ஜிஆருடனான கடைசிப்படம்..ஆனாலும் 28 படங்களில் அவருடன் நடித்த ஒரே நாயகி என்ற பெருமை கிடைத்தது..

மக்கள் திலகத்துடன் வாய்ப்பு போனாலும் நடிகர் திலகத்துடன் படங்கள் அமையவே செய்தன. இரட்டை வேடத்தில் துவம்சம் செய்த வந்தாளே மகராசி, சூரியகாந்தி, 100 வது படமான திருமாங்கல்யம் என தனது நடிப்புக்காகவே மட்டும் தனியாய் பேசப்பட்ட படங்களையும் ஜெயலலிதா கொடுக்கத்தவறவில்லை..

இருபெரும் திலகங்களுடன் வெற்றிகரமாக ஓடிய ஜெயலிதாவின் திரைப்பயணம். ஜெய்சங்கர், முத்துராமன், ஸ்ரீகாந்த் ஆகியோரை கடந்து கமல்ஹாசன் போன்றவர்களுடனும் இணைந்து கடைசியில் சரத்பாபுவுடன் ஜோடி சேர்ந்து 1980ல் நதியை தேடிவந்த கடல் படம் மூலம் தமிழில் முற்றுப்புள்ளி கண்டது. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்து ஜெயலலிதா டூயட் பாடிய ‘’தவிக்குது தயங்குது ஒரு மனசு’’ என்ற பாடல் அவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட்..

இந்த தவித்த மனசு யார்? பொதுவாக கடலைத்தான் நதி தேடி வரும்..ஆனால் உண்மையில், கடலே நதியை தேடித்தான் வந்தது.. எப்படி, எங்கே?  அவற்றை அடுத்த நிறைவு கட்டுரையில் பார்ப்போம்….

(தொடரும்)

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன்