ஜெயலலிதா விருப்பத்தை நிறைவேற்றிய மோடி அரசு

Must read

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பங்களை மீறி, மத்திய அரசின் உத்தரவுகளையே தற்போதைய “ஜெயலலிதா அடிமைகளின்” ஆட்சி நிறைவேற்றி வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.  சென்னையில் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை உதாரணங்களாக சொல்லப்படுகின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் விருப்பம் ஒன்றை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

இறைச்சிக்காக பசு, காளை, ஒட்டகத்தை விற்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் மாடுகளுக்கு கொம்பு சீவுவது, வர்ணம் பூசுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் திருநாளின்போது தமிழ் மக்கள் மாடுகளை  அலங்கரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் “மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடக்கூடாது என்பது சிறுபிள்ளைத்தனமான உத்தரவு. அப்படி செய்தால் மாடுகளை வளர்க்கவே முடியாது” என்று மாடு வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த உத்தரவில், கோயில்களில் மாடுகளை பலியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  இது இந்து மக்களிடையேயும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் கோயில்களில் மாடுகளை பலியிடும் வழக்கம் இந்துக்களின் பல பிரிவினரிடையே இருந்துவருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு இதே போன்ற உத்தரவை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்தார்.

அப்போதைய தனது உத்தரவில், “தமிழகத்தில் உள்ள கோவில்களிலும், கோவில்களுக்கு அருகாமையிலும் தெய்வத்திற்குப் பலியிடுதல் என்றபெயரில் ஆடுகள், மாடுகள், கோழிகளை கொல்லக் கூடாது. , மீறி செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும்” என்று அவர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.

தற்போது மத்திய பாஜக அரசும் இதே போன்ற உத்தரவை வெளியிட்டுள்ளது.

பொதுவாக, மத்திய பாஜக அரசின் உத்தரவுகளை, தமிழக அ.தி.மு.க. அரசு செயல்படுத்துவதாக கூறப்படும் நிலையில், ஜெயலலிதாவின் உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2003ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்த “கோயில்களில் மாடுகளை பலியிட தடை” என்ற உத்தரவு மக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்துத்தந்தது. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அ.தி.மு.க.வுக்கு கடும் தோல்வி ஏற்பட்டதை அடுத்து குறிப்பிட்ட உத்தரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article