ஜெயலலிதா

மிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் அறியப்பட்ட பிரபலம், ஜெயலலிதா. தமிழக முதல்வர் என்பது மட்டுமின்றி, பாரத பிரதமர் பதவியையும் குறிவைத்த நபர்.

அப்படிப்பட்டவரின் மரணத்தில் நிலவும் மர்மங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.  மிகப்பெரிய ஆளுமையான ஜெயலலிதாவின் மரணத்தில்கூட மர்ம முடிச்சா என்று ஆச்சரிய ஆதங்கம் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் என ஆன்மிக அன்பர்கள்  ஒரு அதிர்ச்சகரமான சம்பவத்தை தெரிவிக்கிறார்கள்..

அவர்கள் சொல்வது இதுதான்:

“ஜெயலலிதா மிகுந்த கடவுள் பக்தி கொண்டிருந்தார். கோயில் கோயிலாக சென்று வழிபட்டார்.. , ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் செய்தார்.

எல்லாம் சரிதான். ஆனால் அவர்  அறிந்தோ, அறியாமலோ செய்த பாவம் ஒன்றுதான் அவருக்கு பல துன்பங்களை தந்துவிட்டது. அதனால்தான் ராணி போல உலாவந்த அவர், தனிப்பட்ட வாழ்க்கையில்  சோகங்களைச் சந்தித்தார். உறவுகள் முறிந்தன, சிறையில் அடைக்கப்பட்டார், ஏன்..   அவரது மரணம் கூட மர்ம முடிச்சில் சிக்கிக் கிடக்கிறது!” என்கிறார்கள்.

அது என்ன பாவம்?

அந்த ஆன்மிக அன்பர்களே சொல்கிறார்கள்:

”எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரம்.  1981ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாடு சீரும் சிறப்புமாக நடந்தது.  அந்த பிரம்மாண்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, “‘காவிரி தந்த கலைச்செல்வி’  என்ற ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா (இடையில் முன்னாள் அமைச்சர் ராசாராம்)

இதில் பங்குகொள்ள மதுரை வந்திருந்த ஜெயலலிதா, அங்கு மூன்று நாட்கள் தங்கினார். அதில் ஒரு நாள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு கம்பீரமாய் வீற்றிருந்த மதுரை மீனாட்சியை மனமுருகி தரிசித்தார். அத்தோடு வந்திருக்கலாம்.

மீனாட்சிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், ஜெயலலிதாவைக் கவர்ந்தன. அது குறித்து அங்கிருந்த அர்ச்சகர்களிடம் விசாரித்தார்.

அந்த நகைகள் குறித்து விளக்கிய அர்ச்சகர்கள், “இன்னும் பல நகைகள் அம்மனுக்கு இருக்கின்றன. அவற்றை சிறப்பு பூஜை அன்று அணிவிப்போம். அதாவது, கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, திருக்கல்யாணம் போன்ற நிகழ்வின் போது” என்றனர்.

“அந்த நகைகளைப் பார்க்க வேண்டும்” என்றார் ஆர்வத்துடன் ஜெயலலிதா.

அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். “கடவுள் விக்கரகத்துக்கு  உள்ள அதே சக்தி, அந்த விக்ரகத்துக்கு அணிவிக்கப்படும் நகைகளுக்கும் உண்டு.  குறிப்பிட்ட நாளில் அணிவிக்க வேண்டிய நகைகளை மற்ற நேரத்தில் பார்க்கக்கூடாது ” என்றார்கள்.

ஜெயலலிதாவின் பிடிவாத குணம்தான் உலகம் அறிந்த விசயமாயிற்றே! தவிர அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அபிமானத்துக்குரியவர். அவரது அழைப்பின் பேரில் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் நடனமாட வந்திருப்பவர்.

மீனாட்சி அம்மன்

அந்த நகைகளை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். வேறு வழியின்றி, ஜெயலலிதாவை அழைத்துப்போய் அந்த நகைகளை காண்பித்தனர் அர்ச்சகர்கள்.

அப்போது சட்டென சில நகைகளை எடுத்து தன் கழுத்தில் வைத்து அழகு பார்த்துவிட்டார் ஜெயலலிதா.

அர்ச்சகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

“நீங்கள் கோயில் நகைகளை பார்த்ததே தெய்வ குற்றம். இதில் கழுத்தில் வைத்து அழகு பார்க்கிறீர்களே.. அவற்றை வைத்துவிடுங்கள்” என்று பதறிப்போய் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் ஜெயலலிதாவோ, அம்மன் நகைகளை ஆறஅமர, தனது கழுத்தில் அணிந்து அழகு பார்த்துவிட்டே வைத்தார்.

இதுதான் அறிந்தோ அறியாமலோ அவர் செய்துவிட்ட மிகப்பெரிய தெய்வ குற்றமாகிவிட்டது. மதுரை மீனாட்சி வெகுண்டுவிட்டாள். ஜெயலலிதாவின் மேல் மீனாட்சியின் உக்கிர பார்வை பதிந்தது. அவளது சாபத்துக்கு ஆளானார் ஜெயலலிதா.

அம்மன் நகைகள் சில

இந்த சம்பவம் நடந்த 1981ம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டன. வெளியில் பார்த்தால் அரசியலில் ரீதியாகவும் எம்.ஜி.ஆரின் ஆதரவைப்பெற்று உலா வந்தது…  பிற்காலத்தில் முதல்வர் ஆனது  என்று வெற்றிகரமான வாழ்க்கையாக தெரியலாம்.

ஆனால் உண்மையில் அவர் மனம் நொந்தே வாழ்ந்தார் என்பது அவரை நெருக்கமாக அறிந்தோருக்குத் தெரியும். அது மட்டுமல்ல.. அவரது இறப்பின் பின் இருக்கும் மர்மம் இன்னமும் நீடிக்கிறது.

மீனாட்சி அம்மனின் சாபம்தான் இவற்றுக்கெல்லாம் காரணம்” என்கிறார்கள் அந்த ஆன்மிகவாதிகள்.

மேலும், “ஜெயலலிதாவின் இந்த செயல் பற்றி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவரும்கூட வருத்தப்பட்டார். ஆனால் இந்த பாவத்துக்கு தகுந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதை ஏனோ எம்.ஜி.ஆர். பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார்கள் அந்த ஆன்மிக அன்பர்கள்.

இப்படியோர் சம்பவம்.. அதாவது மதுரை மீனாட்சி அம்மனின் நகைகளை சாஸ்திரத்துக்கு விரோதமாக ஜெயலலிதா அணிந்தாரா… என்று பலரிடமும் விசாரித்துக்கொண்டிருந்தோம். அந்த நிலையில்தான் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டிருந்ததை கவனித்தோம்.

உடனே அவரை தொடர்புகொண்டு விசாரித்தோம்.

கே.எஸ்.ஆர்.

அவர், “நான் பாரம்பரியத்தை மதிப்பவன். மனிதர்களை நேசிப்பவன். மற்றபடி பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை” என்றவர், “சாஸ்திரத்துக்கு விரோதமாக, சட்டத்துக்குப் புறம்பாக, மதுரை மீனாட்சி அம்மன் நகைகளை ஜெயலலிதா பார்த்தது உண்மைதான். மற்றபடி அவர் அணிந்தாரா என்று தெரியாது” என்று சொல்லி அதிர வைத்தார்.

மேலும் அவர், “அந்த காலகட்டத்தில் மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பழ.நெடுமாறன் பொறுப்பில் இருந்தார். அவரோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தேன் நான்.

அந்த சமயத்தில் மீனாட்சியம்மன் கோவிலில் குருக்கள், தங்களது எதிர்ப்பையும் மீறி அம்மன் நகைகளை ஜெயலலிதா பார்த்ததாக வேதனையோடு தெரிவித்தார்.

அந்த நேரத்தில்தான் தமிழகம் முழுதும் உள்ள கோயில்களில் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது, அடையாளப்படுத்துவது, அவற்றை எப்படி ஆவணப்படுத்தி பாதுகாப்பது என்பது குறித்து ஆராய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவிடம் தமிழக கோயில்கள் குறித்து பல்வேறு தகவல்களை அளித்தோம். அதே போல மதுரை மீனாட்சி அம்மனின் நகைகளை ஜெயலலிதா அத்து மீறி பார்வையிட்டது குறித்தும் தெரிவித்தோம்.

அந்த மனுவை  நெடுமாறன் தலைமையில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள், பாரமலை மற்றும் தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி. சுப்பிரமணியம் (தி.மு.கவை அண்ணா துவக்கும்போது ராபிட்சன் பூங்கா நிகழ்ச்சி அழைப்பிதழில் இவர் பெயரும் இடம் பெற்றது.தஞ்சை இராமாமூர்த்தி, அடியேனும் சென்று வழங்கினோம்” என்று சொல்லி முடித்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

ஆக. சாஸ்திர சம்பிரதாயங்களை.. சட்ட விதிகளை மீறி, மீனாட்சி நகைகளை ஜெயலலிதா பார்த்தது உறுதியாகியிருக்கிறது. இது பாவ காரியமா, அதனால் ஜெயலலிதா சாபத்துக்கு ஆளானாரா என்பதையெல்லாம் விசயம் தெரிந்த ஆன்மிக பெரியவர்கள்தான் சொல்ல வேண்டும்.