சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பணிகள் 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா தரப்பு கோரிக்கையை ஏற்று அவர் மீது புகார் அளித்தவர்கள் பற்றிய தகவல்களை தரவும் விசாரணை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்த  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, எடப்பாடி தலைமையிலான அரசு, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த,ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை கமிஷன் அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம், ஜெ.க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள்,  சசிகலா குடும்பத்தினர்,  பொதுமக்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை யின்போது பலர், ஜெ.க்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என அவல்மீது குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சசிகலா விசாரணைக்கு ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதற்கு பதில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் மூலம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது புகார் தெரிவித்தவர்கள் விபரம், புகார் விபரம் கேட்கப்பட்டது. மேலும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த, சசி.,வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் அனுமதி கோரி, மனு செய்தார்.

இதற்கு தயார் என்று விசாரணை ஆணையம் அறிவித்திருந்தது. அதையடுத்து, சசிகலா குறித்து புகார் தெரிவித்தவர்களிடம்  குறுக்கு விசாரனை செய்ய வசதியாகவும், சசிகலா ஏதிராக கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களை சசிகலாவுக்கு அனுப்பியும் விசாரணை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் குறிப்பாக, டாக்டர்  சிவக்குமார், டாக்டர் பாலாஜி, பூங்குன்றன் ஆகியோரின் தகவல்கள் முழுமையாக பெறப்படவில்லை என்பதால், அந்த விவரம் சசிகலா தரப்புக்கு அளிக்க இயலாது என்பதையும்  விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ளவர்கள் யார் யார், என்ன புகார்கள் அளித்துள்ளனர்கள் என்ற தகவலை தர விசாரணை ஆணையம் ஒப்புதல் அளிததுள்ளது.

இதையடுத்து, சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை நடத்த ஏதுவாக 15 நாட்களுக்கு பிறகு, விசாரணை மீண்டும்  நடைபெறும் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.