சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 1400 இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 1,400 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் முதல் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு,  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ முகாம் நடைபெறுகின்றன.

நேற்று  வெள்ளிக்கிழமை (பிப். 23) முதல் புதன்கிழமை (பிப். 28) வரை 700 சிறப்பு மருத்துவ முகாம்களும், இன்று (சனிக்கிழமை) (பிப். 24) முதல் மார்ச் 6-ம் தேதி வரை 700 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1,400 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த மருத்துவ முகாம்களில் பிறவிக் குறைபாடுகளுக்கான சிறப்பு பரிசோதனைகளுக்கும், புற்றுநோய் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனைகள், ரத்தம், ஸ்கேன் பரிசோதனைகள், மருத்துவ நிபுணர்களால் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள், ஆலோசனை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.